Sunday, July 06, 2008

28. SURVIVAL OF THE SICKEST

விமர்சனம் செய்கிறவர் நண்பர் ஞானசேகர். நன்றி!
-----------------------------------------------------------------------------
புத்தகம் : Survival of the sickest (The surprising connections between disease and longevity)ஆசிரியர் : Dr. Sharon Moalem with Jonathan Prince
மொழி : ஆங்கிலம்

விலை: 13.95 USD
பக்கங்கள்: 210
பதிப்பகம்: Harper Perennial
-----------------------------------------------------------------------------

மனிதர்கள் இரண்டு கால்களில் நடப்பதேன்? மனிதர்களின் மூக்கு கீழ்நோக்கி இருப்பதேன்? மனிதர்களின் தோலோடு கொழுப்பு ஒட்டியிருப்பதேன்? இந்த கேள்விகளைப் பற்றி விவாதித்த இப்புத்தகத்தின் கடைசி அத்தியாயம் கொடுத்த ஆச்சரியத்தில் இருந்து இன்னும் மீளாமல், இப்புத்தகத்தைப் பற்றி எழுதத் தொடங்குகிறேன்.

Alzhimer நோயால் பாதிக்கப்பட்டு, தொடர்ந்து இரத்ததானம் செய்துகொண்டிருக்கும் தனது தாத்தாவின் கஷ்டங்களைக் கண்டு கலங்குகிறான் 15 வயதில். அதே நோய் தனக்கும் 18 வயதில் வரும்போது, அவனுக்குள் பல கேள்விகள். சூழ்நிலைக்கேற்றவாறு தகவமைத்துக் கொள்வது பரிணாமம் என்றால், கேடுதரும் ஜீன்களை அப்பரிணாமம் தலைமுறைகளுக்குக் கடத்துவதேன்? அக்கேள்விகளுக்கு விடைதேடப் புறப்பட்டதன் விளைவு, அவர் இன்று ஒரு மருத்துவ விஞ்ஞானி; மற்றும் இப்புத்தகம்.

"Welcome to the our magical medical mystery tour" என்று வரவேற்கிறது இப்புத்தகத்தின் முன்னுரை. நாம் அன்றாடம் பார்க்கும், பசுவம்மை தழும்பு உள்ள நமது முந்தைய தலைமுறை ஓர் உதாரணம். பசுவம்மைக்கும், பெரியம்மைக்கும் இடையே இருப்பது வேறொன்றுமில்லை; magical medical mystery தான். எப்போதுமே ஒரு மனிதன் தனியாக இருப்பதில்லை; பாக்டீரியா முதல் கொசு வரை ஆயிரக்கணக்கான பேர் அவனைச் சார்ந்துள்ளன. பரிணாமம் என்னும் கயிற்றினால் கட்டப்படிருக்கும் இம்முடிச்சுகளைக் கொஞ்சம் அவிழ்க்க முயல்வதே இப்புத்தகம். "பரிணாமம் என்பது முடிந்துவிடவில்லை; பரிணாமம் என்பது ஒருமையில்லை; எல்லா உயிகளும் சேர்ந்தே பரிணமிக்கின்றன" என்ற ஒரு வரி கருத்தைப் பல உதாரணங்களுடன் விளக்குவதே இப்புத்தகம்.

'புரியாத புதிர்' படம் முடிந்தவுடன் கே.எஸ்.ரவிக்குமார் சொல்வார்: "தயவுசெய்து இப்படத்தின் முடிவை யாரிடமும் சொல்லிவிடாதீர்கள்". இதைவிட பலமடங்கு அதிகமான பொறுப்பு, இப்போது எனக்கு உள்ளது! இப்புத்தகத்தின் ஏதேனும் ஓர் உட்கருத்தை எடுத்து, இப்பதிவைப் படிப்பவர்களுக்காக எடுத்துச் சொல்வது, ஆசிரியர் சொல்லும் magical medical mystery யைப் பாதிக்கும் என நான் நினைக்கிறேன்.

இப்புத்தகம் மூலம், கீழ்க்கண்டதுபோல் பல கேள்விகளுக்கு விடைகிடைக்கும். 14ம் நூற்றாண்டில் ஐரோப்பியக் கண்டத்தைக் கொன்று குவித்த பிளேக் நோய், ஏன் சிலபேரை மட்டும் தாக்கவில்லை? பெரும்பாலான உயிரினங்களை அடியோடு அழித்த, பனியுகத்தில் இருந்து நமது முன்னோர்கள் சிலர் மட்டும் எப்படித் தப்பித்தார்கள்? ............................................ மனிதன் என்ற பாலூட்டிக்கு உடலை ரோமங்கள் ஏன் மூடியிருக்கவில்லை? மனிதர்கள் இரண்டு கால்களில் நடப்பதேன்? மனிதர்களின் மூக்கு கீழ்நோக்கி இருப்பதேன்? மனிதர்களின் தோலோடு கொழுப்பு ஒட்டியிருப்பதேன்?

Sun glass போடுவதால் ஏற்படும் குறை - சிலபேர் (பெரும்பாலான ஆசியர்கள்) சரக்கு (alcohol) அடிக்கும்போது ஒரே சிப்பில் முகமெல்லாம் வியர்த்துவிடுவதன் நன்மை - இதுபோன்ற பல விஷயங்கள். எனக்கு பிடித்த - பசுமரத்தாணிபோல மனதில் வைத்துக்கொண்ட - பகுதி, மத்திய கிழக்கு நாடுகளின் மக்களிடையே காணப்படும் Favism என்ற குறைபாடு. அசந்துபோனேன். பொதுவாக நண்பர்களிடம் மணிக்கணக்கில் விவாதிக்க சில விஷயங்கள் கைவசம் வைத்திருப்பேன்: காலண்டர், நாஸ்டர்டாமஸ், வைரமுத்து, மதம், சூரிய மண்டலம், Time zones. இப்போது இப்புத்தகம்; குறிப்பாக Favism, Asian Flush, Water birthing!

எல்லா கொடூர விஷயங்களுக்குப் பின்னே ஏதோ ஓர் மெல்லிய நன்மை இருக்கலாம் என்பதைச் சில உதாரணங்கள் மூலம் உணரவும், பூர்வீகமும் உணவுமுறைகளும் நம்மை எப்படி தகவமைக்கின்றன என்பதை இன்னும் நிரூபித்துக் கொள்ளவும் தவறாமல் இப்புத்தகத்தைப் படிக்கலாம். இப்புத்தகத்தை ஏற்கனெவே படித்த என்னைப் போன்றவர்கள், அன்பளிப்பு கொடுத்து ஆச்சரியப்படுத்துவது உறுதி.

- ஞானசேகர்