Tuesday, December 15, 2009

54. MIDNIGHT'S CHILDREN

பதிவிடுகிறவர் நண்பர் ஞானசேகர். நன்றி!

A son who will never be older than his motherland - neither older nor younger. There will be two heads; there will be knees and a nose, a nose and knees. He will have sons without having sons! He will be old before he is old! And he will die before he is dead!

If one wishes to remain individual in the midst of the teeming multitudes, one must make oneself grotesque.

-------------------------------------------------------------
புத்தகம் : Midnight's Children (புதினம்)
ஆசிரியர் : Salman Rushdie
மொழி : ஆங்கிலம்
வெளியீடு : Vintage U.K.
முதற்பதிப்பு : 1981ம் ஆண்டு, Jonathan Cape Ltd.
விலை : தோராயமாக 300 ரூபாய்
பக்கங்கள் : 463 (தோராயமாக 43 வரிகள் / பக்கம்)

-------------------------------------------------------------

சிறப்புகள்:

1) 1981ம் ஆண்டு புக்கர் பரிசு
2) புக்கர் பரிசுகளில் சிறந்த புத்தகத்திற்கான பரிசு இருமுறை
3) Time இதழ் தேர்வு செய்த சிறந்த 100 ஆங்கில நாவல்களில் இடம்பெற்ற ஒரே இந்தியப் புதினம்
4) BBC தேர்வு செய்த சிறந்த 100 ஆங்கில நாவல்களில் இடம்பெற்ற இரு இந்தியப் புதினங்களில் ஒன்று



சலீம் சினாய். புத்தகத்தின் முதல் பக்கத்தில் பேச ஆரம்பிக்கிறார். ஆகஸ்ட் 15, 1947 அன்று நள்ளிரவு சரியாக பன்னிரண்டு மணிக்குப் பிறந்ததாகச் சொல்கிறார். வித்தியாசமான கதைக்களம் எனப் புத்தகத்தின் முதல் பத்தியிலேயே தெரிந்தது. புத்தகத்தின் தலைப்பில் Children என்று பன்மையில் இருக்கும்போது சலீம் மட்டும் தனியாகப் பேசுகிறாரே என்று, கதைக்களம் எப்படி எல்லாம் இருக்கலாம் என கொஞ்சம் கற்பனை செய்துகொண்டு தொடர்ந்தேன்.

புத்தகம் படித்து முடித்தவுடன் கதைமாந்தர்கள் பெயரெல்லாம் எழுதி, பெயர் சூட்டப்பட்ட முறைகளை, புத்தகம் சொன்ன கதையை, அது சொல்லப்பட்ட விதத்தை யோசித்துப் பார்த்தேன். இப்புத்தகத்தை எல்லோரும் ஏன் இந்தப் புகழ் புகழ்கிறார்கள் என்பதை அப்போது உணர்ந்தேன். ஆங்கிலத்தில் எனது விருப்பப் பட்டியலில் முதலிடம் பெறும் புதினம்! நெடுங்குருதிக்குப் பிறகு நான் படித்த சிறந்த புதினம். நீங்கள் இப்புத்தகம் படிக்கும்போது மையக்கதையின் சுவாரசியம் பாதிக்கப்படாத வகையில் இப்புத்தகம் பற்றிய நான் இரசித்த விசயங்களை உங்களோடு பகிர்கிறேன்.

ஆசிரியரைப் பற்றி உங்களில் பலருக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும். இப்புத்தகத்தைத் தீபா மேத்தா (Deepa Mehta) திரைப்படமாக்கிக் கொண்டிருக்கிறார். அதில், நான் இப்பதிவின் தொடக்கத்தில் சொன்ன முதல் வசனத்தைப் பேசப்போகிறவர்தான் இப்புத்தகத்தின் ஆசிரியர். சல்மான் ருஷ்டி. பிறந்த வருடம் 1947!

சலீம் சினாய் இந்திய நாட்டுடன் சேர்ந்தே பிறக்கிறார். இந்தியாவின் போக்கைப் பிரதிபலிக்கப் போவதாக எண்ணி, சலீமை மொத்த தேசமும் உன்னிப்பாகக் கவனிக்குமென ஜவகர்லால் நேரு சலீமுக்குக் கடிதம் எழுதுகிறார். அந்த சலீம் வரலாற்றுக்குள் எப்படி தள்ளப் படுகிறான், வரலாற்றால் எப்படி மறுக்கப்படுகிறான், அவனுக்குப்பின் வரலாறு என்னவாகப் போகிறது, அவனின் பாதிப்பு எப்படியெல்லாம் தொடரப் போகிறது என்பதை இந்தியா - பாகிஸ்தான் - வங்காளதேசம் என்ற மூன்று நாடுகளின் வரலாற்று நிகழ்வுகளின் போக்குகளில் சல்மான் ருஷ்டி தந்திருக்கும் புதினமிது. 1915 முதல் 1977 வரை பயணிக்கிறது புதினம். முதல் உலகப்போர் முதல் எமெர்ஜென்சி வரை.

வரலாற்றின் போக்கில் சுவாரசியம் தேடுபவர்களுக்கு நல்ல புத்தகம். ஒரு பிரதமரும் அவரின் வாரிசான இன்னொரு பிரதமரும் சோசியக்காரர்களின் கைப்பொம்மையாக இருந்தது, சுதந்திரகாலத்து பம்பாய், டென்சிங் எவரெஸ்ட் தொட்டது, முகமது நபிகளின் பொருள் ஒன்று இந்தியாவில் திருடுபோனது, கம்யூனிசம், பம்பாய் மாகாணத்தில் இருந்து குஜராத் பிரிந்தது, வங்காளதேச பிறப்பு, இந்தியாவின் போர்கள், பக்ரா நங்கல் அணையில் கீறல் விழுந்தது, ஜனதா மோர்ச்சா கட்சி தோன்றியது எனப் பல நிகழ்வுகள் கதையின் போக்கோடு நிகழும். ஒரு ஜனாதிபதி நிர்வாணமாக நாடு கடத்தப்படும்போது சலீம் அவருக்குப் பக்கத்தில் அமர்ந்திருப்பார்!

மிகக்கொடூரமான நிகழ்வான ஜாலியன் வாலாபாக் படுகொலையைப் படுநேர்த்தியாக இலக்கிய நயத்துடன் சொல்லியிருப்பார். அந்தத் துப்பாக்கிச் சூடுகளுக்குத் தப்பித்து இரத்தக் கறைகளுடன் வீடு வருபவனிடம் மனைவி சொல்வாள்: "எப்ப பாத்தாலும் ஒங்களுக்கு வெளையாட்டுதான்; ஏதாவது சாயத்தைப் பூசிட்டு வந்திட்டு, இரத்தமுன்னு சொல்லி என்கிட்டே சில்மிஷம் செய்றதே வேலையாப் போச்சு".

வரிகள் உயர்த்தப்பட்டு, வரி செலுத்துவதற்கான குறைந்தபட்ச வருமானம் குறைக்கப்பட்ட ஒருநாளில் ஒரு வசனம்: "மேற்சட்டையை தூக்கிக்கொண்டு காற்சட்டையை இறக்கிவிட்டு மலம்கழிப்பது போல....".

இந்தியாவின் படைத்தளபதி ஒருவர் வேறொரு நாட்டில் சிறைப்பிடிக்கப் பட்டதாக செய்திவந்த நாளில் இந்திய ஜனாதிபதி விடுத்த அறிக்கை: "துரதிஷ்டவசமாக இச்செய்தி முழுவதுமாக உண்மையில்லை - Unfortunately this report is untrue completely". அறியாமை இல்லாதவர் என தன்னைக் கூறியவரைக் கண்டித்து போஸ்டர் அடித்த அரசியல் கதையெல்லாம் தமிழ்நாட்டிலேயே உண்டு.

அலகாபாத் நீதிமன்றம் இந்திரா காந்தியின் எம்பி பதவி செல்லாதென அறிவித்ததில் இருந்து எமெர்ஜென்சி வரையுள்ள 13 நாட்களை ஒரு கர்ப்பிணியின் பிரசவவலியோடு ஒப்பிட்டு கிட்டத்தட்ட நிறுத்தக் குறிகளைத் தவிர்த்து எழுதியிருக்கும் இரண்டரை பக்க அளவுள்ள பகுதி, புத்தகம் படித்த எவராலும் மறக்கமுடியாத இடம். கதையில் மிகவும் குறைந்த பக்கங்களில் இந்திரா - சஞ்சய் காந்திகள் வந்திருந்தாலும் புத்தகம் வெளிவந்த பிறகு இந்திரா சல்மான் மீது வழக்கு தொடரும் அளவிற்கு அவர்களின் நடவடிக்கைகளைத் தாக்கியிருப்பார். சஞ்சய் காந்தியின் கட்டாய கருத்தடை திட்டப்படி, பாலினம் மாறும் சக்தி படைத்த ஒருவனுக்கு இரண்டு முறை *ectomy செய்திருப்பார்கள்!

எமெர்ஜென்சி காலத்தை ஒருவனின் காசநோயுடன் ஒப்பிட்டு இருப்பதும், நாட்டின் பொருளாதார நிலைமையைப் பிரதமரின் சிகையலங்காரத்துடன் ஒப்பிட்டிருப்பதும், ஒரு நாளின் செய்தித்தாளில் உள்ள நிகழ்வுகளை வைத்து வரலாற்றை மாற்றி எழுத சலீம் முயற்சிப்பதும் பிரம்மாண்டமான எழுத்துநடை. Buddha, Alpha, Omega போன்ற வார்த்தைகளுக்கு வேறொரு அர்த்தம் கொடுத்து உபயோகித்திருப்பதும், கதைக்காக உண்டாக்கியிருக்கும் Thunderbox, Mandog, Heartboot போன்ற வார்த்தைகளும் அருமையான சொல்லுபயோகங்கள்.

சல்மான் ருஷ்டியின் புத்தகத்தில் கடவுள்கள் இல்லாமலா? நிறையவே உண்டு. ஒரு காமக்கொடூரன் ஒரு பெண்ணுடன் மாதக்கணக்கில் கலவியில் இருப்பான். இருவருக்கும் தம்பதிகளான கடவுளர்களின் பெயர்கள். அக்கடவுள்கள் மலைமீது செய்யும் தெய்வீக யுத்தத்தைப் பூமியில் பிரதிபலிப்பதாகச் சொல்வார். மும்பாதேவியை விரட்டிவிட்டு கணேசக் கடவுள் பம்பாயை ஆக்கிரமித்ததை அட்டகாசமாகச் சொல்லியிருப்பார். ஜோசப் என்ற தனது காதலனின் விருப்பப்படி, ஒரு குழந்தையை வளர்த்துக்கொண்டு கடைசி வரை கன்னியாகவே ஒருத்தி இருப்பாள்; அவளுக்குப் பெயர் மேரி.

இரண்டாண்டுகள் திருமண வாழ்வில் தனது மகளுக்குக் கன்னித்திரை கிழியாததைக் கண்டறியும் ஒரு தந்தை; கண்ணாடிப் பிம்பங்களாக உலகைப் பார்க்கும் ஒருவன்;செருப்புகளுக்குத் தீ வைக்கும் ஒரு பெண்; திருக்குரானின் அதிகாரங்களை மறுவரிசைப்படுத்த முயலும் ஒருவன்; குழந்தைகளை வெறுக்கும் ஒரு gynaecologist; எண்களையும், நிறங்களையும் கூட கதைமாந்தர்களாக்கிக் கொண்ட கதைக்களம்; கதைக்குக் குரல் கொடுக்கும் சில வரலாற்றுப் பாத்திரங்கள்; இன்னும் பல வித்தியாசமான கதாப்பாத்திரங்கள்.

புதினத்தின் மையக்கதையைப் பற்றி தெரிந்து கொள்ளாமல், திரைப்படமாய்ப் பார்ப்பதற்கு முன், இப்புத்தகத்தைப் படித்துப் பாருங்கள். உங்களின் ஞாபகசக்தி, ரசனை மற்றும் கற்பனைத் திறன்களோடு பரமபதம் விளையாடும் ஒரு புத்தகம். பாம்பும் மேலேற்றிவிடும்; ஏணியும் கீழ்தள்ளிவிடும்! சாபங்களாகும் வரங்களுக்காத் தவமிருப்பதே வாழ்க்கை!

கொசுறு:

புத்தகம் படித்து முடித்தவுடன் அதன் அட்டைப் படங்களைப் பற்றி இணையத்தில் துலாவினேன். ஒவ்வொரு படத்திற்கும் ஒவ்வோர் அர்த்தம். ஊறுகாய் பாட்டில்கள் அடுக்கப்பட்ட ஓர் அட்டைப்படமும் உண்டு.

BBC தேர்ந்தெடுத்த இரு இந்தியப் புதினங்கள் என்று ஆரம்பத்தில் சொன்னேன் அல்லவா? அந்த இரண்டு புத்தகங்களின் பொதுவான ஓர் அம்சம் உண்டு. அதுதான் Pickle Factory! விரைவில் அதையும் பதிவிடுகிறேன்.

Most of what matters in our lives takes place in our absence.

- ஞானசேகர்
(http://jssekar.blogspot.com/)

No comments: