Friday, June 18, 2010

63. அபிதா

பதிவிடுகிறவர் நண்பர் Bee'morgan. நன்றி!

இரவோடு நான் காணும் ஒளிவட்டம் நீதான்
என் இருகண்ணில் தெரிகின்ற ஒருகாட்சி நீதான்
வார்த்தைக்குள் ஊடாடும் உள்ளர்த்தம் நீதான்
என் வாத்தியத்தில் இசையாகும் உயிர்மூச்சும் நீதான்
தூரத்தில் மயிலிறகால் தொட்டவளும் நீதான்
என் பக்கத்தில் அக்கினியாய்ச் சுட்டவளும் நீதான்

-வைரமுத்து

------------------------------------------
புத்தகம் : அபிதா
ஆசிரியர் : லா.ச.ராமாமிர்தம்
பதிப்பகம் : கிழக்கு
விலை : ரூ75
பக்கங்கள் : 118

------------------------------------------

நான் படிக்கும் லா.ச.ராவின் முதல் படைப்பு இது. முதல் சில பக்கங்களிலேயே தெரிந்து விட்டது இவரது நடை எனக்கு ரொம்பப் புதியது. இது வரை நான் பழகாத ஒன்று. ஒரு கடினமான சிக்குக் கோலம் போல கோட்டினூடே பயணிக்கையில் வார்த்தை ஜாலங்களாக மயக்கம் கொடுக்கிறது. ஆனால் கொஞ்சம் எட்ட நின்று பார்க்கையில் அதற்கேயுரிய அழகுடன் அமைதியாய் வீற்றிருக்கிறது இவரது எழுத்து.



அபிதாவைச் சுருக்க முடியுமா என்று தெரியவில்லை. ஆனால், கதைச்சுருக்கம் என்று ஒன்று சொல்வதானால் இப்படிச்சொல்லலாம்.

கருவேல நாதர் வீற்றிருக்கும் கரடி மலை. அதன் அடிவாரத்தில் வயலும் குளிர்நீர் நிறைந்த கன்னிகுளமுமாக அழகியதொரு கிராமத்தின் அக்ரஹாரம். இங்குதான் அம்பியின் பால்யம் கழிகிறது. அம்பியின் மனம் சகுந்தலையிடம் நாட்டம் கொள்கிறது. ஆனால், வேறுசில நிகழ்வுகளால் ஊரைவிட்டோடி, நகரத்தில் ஒரு முதலாளியிடம் தஞ்சம் புகுகிறான். வேலையில் மென்மேலும் சிறந்து அவரது மகளையே கரம்பிடித்தாலும், சகுந்தலையின் நினைவுள் உழலும் அவன், பல ஆண்டுகளுக்குப் பின் கரடி மலைக்கு தன் மனைவியுடன் விஜயம் செய்வதில்தான் கதை தொடங்குகிறது. மிச்ச முன்கதைகள் அனைத்தும் இடையிடையே நினைவின் அசைபோடல்களாக வந்துசெல்கின்றன. இப்போது சகுந்தலை உயிருடன் இல்லை. கரடிமலையில் சகுந்தலையின் மறு உருவாக அவளின் மகள் அபிதாவைக் காண்கிறான். அபிதா மீது அம்பி கொள்ளும் ப்ரியத்தை வகைப்படுத்த முடியாமல் தடுமாறுகிறான். அபிதாவின் முறைமாமனான இளைஞன் மீது பொறாமை கொள்கிறான். தன் மனைவி மீது கோபம் கொள்கிறான்.



அபிதா என்கிற பெயருக்கு கடைசிவரை தொடமுடியாதவள் என்று பொருள் சொல்கிறார் லாசரா. அப்படியே அம்பிக்கும் அபிதா தொடமுடியாதவளாக, நூல் முடிவடைகிறது.

நாம் பழகிய மனிதர்கள் வசிக்கும் அக்ரஹாரத்துக்குள் திடீரென நுழைந்துவிட்ட மாதிரி புத்தகம் முழுவதும் பச்சைக்கற்பபூர மணம் கமழ்கிறது. ஒவ்வொரு பாத்திரத்தின் அறிமுகமும், சுய புலம்பல்கள் நிறைந்த உரையாடல்களாலேயே அப்பாத்திரங்களை வரையறுத்திருப்பதும் எனக்கு மிகவும் பிடித்தது. மொத்த வாசிப்புமே ஒரு மெல்லிய போதை போன்ற அனுபவம்தான்.

கடைசிவரை அபிதா என்கிற பிம்பம் முழுமையடையாமலேயே முடிகிறது. அந்த முழுமையைத் தேடிய பயணம்தான் கடைசி வரை நம்மை இட்டுச்செல்கிறது எனலாம். இது ஓரளவுக்கு ஆணாதிக்க மனப்போக்கோ என்ற எண்ணமும் இடையிடையே வந்துபோனது. இப்படி ஒரு சில இடங்களில் ஆசிரியருடன் ஒத்துப்போகமுடியாவிட்டாலும், தனித்துவமான வாசிப்பனுபவம் இது.

மனித மனதின் விசித்திரங்களின் ஆழம், அபிதா.

1982 ல் அபிதா நாடகமாக அரங்கேறியிருக்கிறாள். இந்த செய்தியே எனக்கு பெரிய ஆச்சரியமாகப் படுகிறது. அபிதா, ஒரு அனுபவம். அல்லது ஒரு பெரும் ஓவியத்தில் நாம் ரசிக்கும் ஒரு பகுதி மாதிரி நம் பிடிக்குள் அடங்க மறுத்து திமிறி நிற்பவள். அவளை மனதினுள் பிம்பமாக காட்சிப்படுத்துவதே எனக்கு சிரமமாக இருந்தது. அபிதாவை எப்படி மேடையில் காட்சிப்படுத்தியிருப்பார்கள். எப்படி ஒரு பிரம்மப்பிரயத்தனம் அது. அந்நாடகத்தின் ஒளிப்பதிவுகள் உள்ளனவா என்று தெரியவில்லை. இருந்தாலும் அது தொடர்பாக ருத்ரன் அவர்களின் அனுபவம் இங்கே

http://rudhrantamil.blogspot.com/2009/11/blog-post_25.html

-Bee'morgan
(http://beemorgan.blogspot.com/)

No comments: