Wednesday, July 07, 2010

65. A Fine Balance

பதிவிடுகிறவர் நண்பர் ஞானசேகர். நன்றி!

இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்.
- வள்ளுவம்

இன்னொரு மனிதன்
இருக்கும் வரை
யாருமே
அனாதையில்லை!
- ரா.பார்த்திபன்

---------------------------------------------------------
புத்தகம் : A Fine Balance (புதினம்)
ஆசிரியர் : ரோஹின்டன் மிஸ்ட்ரி (Rohinton Mistry)
மொழி : ஆங்கிலம்
வெளியீடு : McClelland and Stewart (Thorndile Press in large font)
முதற்பதிப்பு : 1995
விலை : 299 ரூபாய்
பக்கங்கள் : 948 (தோராயமாக 36 வரிகள் / பக்கம்)
---------------------------------------------------------




அரசாங்கம் எடுக்கும் முடிவுகள் அதிகாரவர்க்கத்தவர்களால் ஆடப்படும் விளையாட்டுகள். இப்படி நினைத்துக் கொண்டு தனக்கும் அவற்றிற்கும் சம்மந்தமே இல்லாததுபோல் வாங்கின பணத்திற்கும் சாப்பிட்ட பிரியாணிக்கும் நன்றியுணர்வுடன் யாருக்கோ ஓட்டுப்போடும் சாமானியன். சில சமயங்களில் அரசாங்கம் எடுக்கும் சில தவறான முடிவுகள் சில தவறான கைகளுக்குப் போகும்போது, அரசாங்கத்தில் தானும் ஓர் அங்கமென்றுகூடத் தெரியாமல் வாழ்ந்துவரும் அப்பாவிகள் பலர் அடையாளம் தெரியாமல் அழிந்துபோகும் கொடுமையை ஆணித்தரமாகப் பதிவுசெய்யும் புத்தகம். A Fine Balance.

குலத்தொழிலை விட்டுவிட்டு வேறுதொழில் செய்யப்போய், தங்கள் கிராமத்தில் தங்களுக்கு நேர்ந்த அவமானத்தில் இருந்து தப்பித்து, தலைமறைந்து, என்றாவது ஒருநாள் தலைநிமிர்ந்து வாழ்ந்துவிட முடியும் என்ற நம்பிக்கையில் ஒரு மாநகரத்திற்குள் புகும் இரு ஆண்கள். தகப்பன் தொழில் நலிந்துவரும் காலத்தில், அந்நிய நிறுவனங்களின் ஆதிக்கத்தால் தன் தாய்மண் அழிந்துவரும் நிலையில், பணம் கொடுக்கும் வாய்ப்புள்ள ஏதோவொரு படிப்பைக் கற்கும் நோக்குடன் அதே நகருக்குள் வருகிறான் இன்னொரு மலைவாழ் ஆண். அண்ணன் குடும்பம் மட்டுமே ஒரே சொந்தமெனக் கொண்ட ஒரு கைம்பெண், சொந்தக் காலில் நிற்கும் வைராக்கியத்தில் தனியே வாழ்ந்து வருகிறாள். அந்த மூன்று ஆண்களும் இவளின் வீட்டில், வெளிமனிதர்களுக்குத் தெரியாமல் வாழ்வதுதான் பின்னட்டை கதைச்சுருக்கம்.

இந்த நால்வரும் ஒரே வீட்டிற்குள் ஏன் தத்தம் அடையாளங்களை மறைத்துக் கொண்டு வாழ வேண்டும்? அந்த மூன்று ஆண்களும் வெளிமனிதர்களுக்கு ஏன் தெரியப்படுத்தப்படவில்லை? அந்நால்வரின் வாழ்க்கைகளும் அவ்வீட்டிற்கு வெளியே எப்படி இருந்ததன? அவ்வீட்டைவிட்டு வெளியேறியபின் அவர்களின் உறவு என்ன ஆனது? தத்தம் நோக்கங்களை அவர்கள் வென்றார்களா இல்லையா? இக்கதை சொல்வதற்கு ஆசிரியர் பயன்படுத்தியிருக்கும் களம்தான், நான் இப்புத்தகத்தைப் படிக்கக் காரணம்; இந்திய அரசியலமைப்புச் சட்டம் 352 - அவரநிலைப் பிரகடனம் - Emergency.

352 காலத்தில் அதிகாரம் தவறாக உபயோகிக்கப்பட்டதை இந்த நால்வர் வசிக்கும் ஒரு வீடு, ஒரு சேரி (slum) என்ற இரண்டு இடங்களிலுள்ள மாந்தர்களை வைத்துக் கதை சொல்கிறார் ஆசிரியர். கட்டாயக் குடும்பக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சைத் திட்டம், சேரி ஒழிப்புத் திட்டம், எதிர்ப்பாளர்களையும், மாணவ - யூனியன் தலைவர்களையும் அரசியல் கைதிகளாக்கியது, எந்தக் கேள்வியும் முன்னறிவிப்பும் இல்லாமல் யாரையும் கைதுசெய்வது, காணாமல் போனவர்களும், சாலையோரம் வாழ்க்கையைத் தொலைத்துப் போனவர்களும் நகர்த்திப் போகும் கதைக்களம்.

மருத்துவர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கெடுவை (quota) முடிப்பதற்காக வயது, பாலினம், உடல்நிலை ஏதும் பாராமல் கண்மூடித்தனமாக குடும்பக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சையைக் கட்டாயப்படுத்தி செய்தது ஒருபுறம்; அதற்கு ஆட்கள் பிடித்துத்தந்து கமிஷன் பெற்றவர்கள்; தனக்கு வேண்டப்படதாவர்களைச் சிகிச்சைக்குக் கட்டாயப்படுத்திய அதிகாரமுடையவர்கள்; சிகிச்சை என்ற பெயரில் அதையும் தாண்டி தனது சொந்தப் பகை தீர்த்துக் கொண்டவர்கள்; தவறான சிகிச்சைகளில் உடல் - உயிர் தொலைத்துப் போனவர்கள்; பணம், வானொலி என்று இலவசங்கள் கிடைக்கும் ஆவலில் தானே முன்வந்து அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்கள் இன்னொரு புறம். Midnight's Children புத்தகத்தில் பாலினம் மாறும் சக்தி படைத்த ஒரு மனிதனுக்கு, 352 காலத்தில் இரண்டுமுறை அறுவை சிகிச்சை செய்திருப்பார்கள். இப்புத்தகத்திலும் கணக்கு காண்பிப்பதற்காக ஒருவனுக்கு இரண்டுமுறை செய்யப்படும்.

கதைமாந்தர்களின் பின்புலமும் எடுத்துக்கொண்ட களமும் தைரியம் + அருமை + பொருத்தம். தாழ்த்தப்பட்ட தொழில்களாக இந்தியாவில் கருதப்படும் தொழில்களில் ஒன்றைச் செய்யும் ஒரு கிராமம். ஜமின்தாரின் மகன்முன் குனிந்து வேலை செய்ய மறுத்த பெண்ணை மொட்டையடித்து நிர்வாணமாக ஊர்வலம்; உரிமைக்குரல் கொடுத்தவர்களைத் தலைகீழாகக் கட்டித் தொங்கவிட்டு வாயில் மூத்திரம்; திண்ணியம் போல மலம் தின்ன வைக்கும் நிகழ்ச்சி; கீழ்வெம்மணி போல ஊரையே கொளுத்தும் சம்பவம்; பாப்பாப்பட்டி - கீரிப்பட்டி போல ஓட்டுரிமைக்காகப் போராடும் சமுகம்; அழுத்தமான களங்கள். ஒரு தாழ்த்தப்பட்டவளின் வயிற்றுப் பசிக்குக் கொய்யாப்பழம் திருடிய குற்றத்திற்கு உடல்சுகத்தைத் திருடிப்போகும் ஒரு கிளைக்கதை கொஞ்சம் சீரணிக்கக் கடினம்.

மாநகரின் சேரி இன்னொரு களம். சேரிவாழ் மனிதர்களின் சின்னச்சின்ன சந்தோசங்கள், பெருத்த சோகங்கள், கழைக்கூத்தாடி - முடி சேகரிப்பவன் - பிச்சைக்காரன் - தையல்காரன் என்ற அவர்களின் நிரந்தரமற்ற தொழில்கள். புதிதாய்ச் சேரிக்குள் வருபவன் ஒருவனுக்கு அனுபவசாலி ஒருவன், தண்டவாளத்தில் மலம் கழிக்கக் கற்றுத்தரும் நிகழ்ச்சி ஒன்று உண்டு. இரயில்களின் கால அட்டவணை தெரிந்து கொண்டு, தண்டவாளத்தில் எங்கு - எப்படி - எந்த நேரம் உட்கார வேண்டும் என்று வரும் பகுதி நகைச்சுவையாக இருந்தாலும், அடிப்படைக் கழிப்பிட வசதிகள் எல்லாருக்கும் இன்னும் கிடைத்துவிடவில்லை என்பது உண்மை!

புதினத்தில் சிறிது நேரமே வந்து போனாலும் அவினாஷ் என்ற மாணவத் தலைவனும் வாலிமிகி என்ற பிழைத்திருத்துபவரும் மனதில் பதிந்துவிடுகிறார்கள். ஒரு சகோதரனுக்கும் சகோதரிக்கும் உள்ள உறவு, இப்புத்தினத்தில் மிகவும் வித்தியாசமாக சொல்லப்பட்டிருக்கும் உண்மைகளில் ஒன்று. இவர்களுக்கிடையே இருக்கும் வெறுப்பிற்குக் காரணம் பாலியல் சம்மந்தப்பட்டதாக இருப்பதும், ஒரு சகோதரி மீது ஆண் காட்டும் வன்செயல்களும் கசப்பான நிஜம். இந்து முஸ்லீம் கலவரங்கள், சீக்கியப் படுகொலைகள் என வரலாற்றின் மற்ற சில அத்தியாயங்களையும் தொட்டுச் செல்லும் இப்புதினத்தின் சில கதைகளின் சாரம், அங்காடித் தெரு - நான் கடவுள் போன்ற படைப்புகளின் மூலம் நமக்கும் சிறிது பரிச்சயப்பட்டிருக்கலாம். திக்கற்ற மக்கள் தங்கள் வாழ்கையை நகர்த்திக் கொண்டுபோக சந்தோசங்களுக்கும் சோகங்களுக்கும் இடையே காட்டும் ஒரு Fine Balance இப்புத்தகம். இப்புத்தகத்தின் ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சியைப் படித்து முடித்த அந்த இரவில் நான் தாமதமாகத் தூங்கினேன். அக்காட்சியாவது:

குடும்பக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்தவர்கள் மயக்கம் தெளியும்வரை ஓய்வெடுக்கும் அறையது. நீண்ட நேரமாக மயக்கம் தெளியாமல் இருக்கும் தனது பக்கத்தில் உள்ளவனுக்கு என்ன ஆனதென்று தெரியாமல் பதறுகிறான் ஒருவன். இருவரின் காற்சட்டையையும் நீக்கி, ஒவ்வொரு இடமாக கட்டுகளின் மேலேயே தொட்டுத் தொட்டு, தனக்கு செய்தது போலவே அவனுக்கும் செய்யப்பட்டிருக்கிறதா என்று சோதிக்கிறான்.......

போதும். ஆணுறுப்பை நீக்கும் புத்தகம் ஒன்றுடன் அடுத்து சந்திக்கிறேன்.


அனுபந்தம்:

புத்தகத்திற்கு அப்பால்,

1) முன்னாள் இரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவிற்கு ஒன்பது குழந்தைகள். அவசரநிலைப் பிரகடன காலத்தில் செய்யப்பட்ட கட்டாய குடும்பக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சையை எதிர்த்துதான் அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டதாக சொல்வார். அவரின் மூத்த மகளின் பெயர் மிசா (MISA)!

2) ஜூலை 2, 2010 அன்று கேரள சட்டசபை நாள் முழுவதும் முடக்கம்.

3) டெக்ஸ்டைல் நிறுவனங்கள் பம்பாய் நகரில் நலிவடைத்து வந்த காலத்தில் கதை பயணிப்பதால், அதன் சாரத்தைக் கதையோட்டம் கொஞ்சம் தொட்டுச் சென்றது. ஒரு புதிய திரைப்படம் இப்பிரச்சனையை மையப்படுத்தி வெளிவந்திருப்பதாக விளம்பரப்படுத்தப்பட்டது. நானும் மொழிபெயர்ப்பாளன் ஒருவனுடன் சென்று பார்த்தேன்; இரண்டு வித்தியாசமான படுக்கையறைக் காட்சிகள் தவிர வேறொன்றுமில்லை. இன்றைய பிரச்சினைகள் நாளைய வியாபாரங்கள்!

4) ஆடும்கூத்து தவிர வேறு எந்தத் தமிழ்த்திரைப்படத்திலும், அவசரநிலைப் பிரகடனம் பற்றி நான் கேள்விப்பட்டதில்லை. உங்களுக்குத் தெரிந்திருந்தால் சொல்லுங்கள்.

The lives of the poor were rich in symbols.

- ஞானசேகர்
http://jssekar.blogspot.com/