Thursday, November 25, 2010

70. நீர்ப்பறவைகளின் தியானம்

பதிவிடுகிறவர் நண்பர் Bee'morgan. நன்றி!

----------------------------------------
புத்தகம் : நீர்ப்பறவைகளின் தியானம்
ஆசிரியர் : யுவன் சந்திரசேகர்
வெளியிட்டோர் : உயிர்மை பதிப்பகம்
பக்கங்கள் : 208 பக்கங்கள்
விலை : ரூ. 120

----------------------------------------

“மனோவேகம்“ என்றொரு பதம் உண்டு. உண்மையில் மனதின் வேகத்தைக் கணக்கிட முடியுமா என்றால் எதிர்மறைதான். மனிதமனம் ஒவ்வொரு நிமிடத்திலும் சிலநூறு எண்ணங்களைப் பரிசீலிப்பதாகச் சொல்கிறது ஓர் ஆய்வறிக்கை. ஒன்றோடொன்று சம்பந்தமில்லாததாகத் தோன்றும் அந்த எண்ணச்சிதறல்களுக்கிடையில், மெல்லிய சரடொன்று ஊடுபாவியிருப்பது நிதானித்துப் பார்க்கையில் மட்டுமே புலப்படும். இந்தச் சரடு, எண்ணங்கள் அல்லது ஞாபகங்கள் இரண்டை இணைக்கும் வலுவான கயிறல்ல. ஒரு சிறிய நூல் மட்டுமே. இந்த இரண்டையும் தொடர்பு படுத்துவதற்கு இது ஒன்றே போதும். கால தூரங்கள் தொலைத்து சம்பந்தமே இல்லாத ஊரில் ஜனத்திரள்களுக்கு மத்தியில் ஓரிரு வினாடிகளில் கடந்து செல்லும் ஒரு நபர், ஞாபகத்தின் வேறேதோ அடுக்கில் புதைந்திருந்த உங்களுக்கு மிகப்பரிச்சயமான வேறொருவரை - நிச்சயமாக இவர் அவர் அல்ல என்று தெரிந்திருந்தபோதும் - நினைவுபடுத்திச் செல்வதை உணர்ந்திருக்கிறீர்களா? கல்லூரியில் நண்பர்களுடன் பார்த்த ஒரு திரைப்படம், அதன்பின் பார்க்கப்படும் ஒவ்வொரு முறையும் கல்லூரி வாழ்க்கையின் ஞாபகச்சின்னமாக அவதாரமெடுப்பதை? அப்படித்தான் யுவனின் சிறுகதைகளும் பயணிக்கின்றன. ஏதோ ஒரு நினைவைப் பின்பற்றியபடி, அங்கங்கே கிளைபிரிந்து அடுத்தடுத்த நினைவலைகளில் தாவியபடி செல்கின்றன.

எந்தவொரு கதையும் ஒரு தனிக்தையல்ல. ஒரு பெருங்கதையின் ஒரு பகுதிதான். அதே மாதிரி, ஒரு கதையில் துணைப்பாத்திரமாக வரும் ஒருவன், அவனுக்கான கதையின் நாயகனாக வாழ்ந்து கொண்டிருப்பான் என்பது எவ்வளவு நிஜம். யுவனின் சிறுகதைகள், அந்த ”அவனு”க்கும் வேண்டிய இடைவெளியைத் தருகின்றன. ஒரு துணைப்பாத்திரமாக இல்லாமல், நாயகனுக்கு நிகழும் நிகழ்ச்சிகளின் அடர்த்தி குறையாமல், அவனைப் போலவே, உணர்வுகள் உள்ள ஒருவனாகக் கடந்து செல்ல.

இது மையக்கதையின் போக்கைத் தடைசெய்யாதா என்றொரு கேள்வி எழலாம். இங்குதான் யுவனின் சாகசம் ஒளிந்திருக்கிறது. அவர் மையக்கதை என்ற ஒன்றையே கேள்விக்குள்ளாக்குகிறார். ஒவ்வொரு கதையும் அதனளவில் ஒரு தனிக்கதையே. இவர் கதைகளுக்குக் கதை என்ற பதத்தைவிட பகுதி என்பதே பொருந்துமென நினைக்கிறேன். ஒரு கதையின் ஒவ்வொரு பகுதியும் ஒரு விதமான சஞ்சலத்தை நமக்குள் விதைக்கின்றன. ஒரு சிறுகதையை முடிக்கையில், எந்தவொரு பகுதியும் மனதில் நிலைக்காமல், அவற்றிக்கு பொதுவானதொரு உணர்ச்சியும் சில சமயம் எஞ்சி நிற்கிறது.

தன்னிலையில் கதைசொல்லும் உத்தி எழுத்தாளர்களுக்கு எப்போதுமே அலாதியான ஒன்று. இது, சொல்லப்படும் கதைக்கு ஒரு சிட்டிகை அதிகப்படியான நம்பகத்தன்மையைத் தருவதோடு சொல்லும் நடையின் சரளத்திற்கும் கை கொடுக்கிறது. யுவனும் கூட முன்னுரையிலேயே இதனைப்பற்றி(யும்) பேசுகிறார். எந்தக்கதையில் வரும் “நானு“ம் நானல்ல என்று அங்கேயே தெளிவும் படுத்திவிடுகிறார். ஆனாலும், எல்லாக்கதைகளிலும் கரட்டுப்பட்டியில் பிறந்து, வங்கியில் பணிபுரிந்து, சிகரெட் பிடித்தபடி எழுத்தாளனாகப் பரிணமிக்கும் அந்த ”நான்” பிம்பம் கொஞ்சம் சலிப்பைத் தருகிறது. இந்தப் பிம்ப ஒற்றுமை அனைத்து சிறுகதைகளையும் ஒரே பெருங்கதையின் பகுதிகளாகப் பொருத்திப்பார்க்கச் சொல்கிறது. ஒரு வேளை, இதுதான் ஆசிரியர் எதிர்பார்த்த வாசகத்தாக்கமாக இருக்கலாம் என்று கொள்ள வேண்டியிருக்கிறது.
மற்ற கதைகளில் எது எப்படியோ, “சொன்னால் நம்பமாட்டீர்கள்“ கதையில் இதே பிம்பத்தை இவர் பயன்படுத்தியிருக்கும் விதம் அட்டகாசம்.



2007 டிசம்பரில் வெளிவந்த “யுவன் சந்திரசேகர் கதைகள்“ முழுத்தொகுப்பிற்குப் பிறகு எழுதப்பட்ட 10 கதைகள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன.

லேண்ட்மார்க்கில் இப்புத்தகத்தைப் பார்த்தபோது இதனைக் கண்டிப்பாக வாங்கவேண்டும் என்பதற்கு என்னிடம் பெரிதாகக் காரணங்கள் ஏதும் இல்லை. “நீர்ப்பறவைகளின் தியானம்” என்ற பதமே வசீகரமாய்த் தெரிந்தது. அது மட்டுமே நான் அறிந்திருந்த ஒன்று. அதையும் தாண்டிய வசீகரம் யுவனின் எழுத்துகளுக்கு உண்டென்று படுகிறது படித்து முடிக்கையில்.

சாதாரண கதைக்களன்களைக்கொண்டு அசாதாரண கதைகளின் மாய வலைப்பின்னலை உருவாக்குகிறார் யுவன். “விஷக்கோப்பை“யின் பீம்ஸென் ஜோஷியும் “இரண்டே அறைகள் கொண்டி வீட்டி“ல் வரும் நாதஸ்வர வித்வானும் “சுவர்ப்பேயி“ன் ராஜு வாத்தியாரும் அவரவர்க்கேற்ற அளவில் வந்து ஒட்டிக்கொண்டு விடுகின்றனர். இவர்களில் யாரும் ஒரு ஆதர்ச கதாபாத்திரம் கிடையாது. சராசரியான மனித வாழ்வின் மற்றொரு பிம்பங்கள். ஆசை கொண்டு, ஏமாற்றம் கொண்டு, இலக்கின்றி அலைந்து எப்படியாவது வாழ்க்கையை வாழ்ந்து விட்டால் போதும் எனத்தவிக்கும் மானிடர்கள். யாரும் இரண்டாம் முறை திரும்பிப்பார்க்கத் தேவையில்லாத பிம்பங்கள். ஆனால், யுவனின் எழுத்துகளின் வழி காட்சிப்படும் போது, அவர்களின் ஏமாற்றங்கள் நம்மையும் வதைக்கின்றன. நாமும் அவர்களுடனே அலைகிறோம். மிக நெருக்கத்தில் நின்று அவர்களை கவனிப்பதைப்போன்ற மாயத் தோற்றத்தைத் தருகின்றன யுவனின் எழுத்துகள்.

மாய பீன்ஸ் கொடியைப்பிடித்து மேலேறுவது மாதிரி நினைவின் வெளிகளில் நம்மை எங்கெங்கோ இட்டுச்செல்பவை இந்த நீர்ப்பறவைகள். செல்லும் தூரமும் உயரமும் வாசகனைப் பொறுத்தது.

-Bee'morgan
http://beemorgan.blogspot.com/