Monday, January 31, 2011

73. IN THE COUNTRY OF GOLD DIGGING ANTS

பதிவிடுகிறவர் நண்பர் ஞானசேகர். நன்றி!

----------------------------------------------------------------
புத்தகம் : In the Country of Gold-digging Ants (2000 years travel in India)
ஆசிரியர் : அனு குமார்
மொழி : ஆங்கிலம்
வெளியீடு : Puffin Books
முதற்பதிப்பு : 2009
விலை : 225 ரூபாய்
பக்கங்கள் : 191 (தோராயமாக 24 வரிகள் / பக்கம்)

----------------------------------------------------------------

இந்தியாவிற்கு வருகை புரிந்த அயல்நாட்டுப் பயணிகள் யார்? இதுபோன்றதொரு கேள்வி ஆறாம்வகுப்பு முதலிடைத் தேர்வில் சமூகவியலில் ஐந்து மதிப்பெண்ணுக்குக் கேட்கப்பட்டபோது மார்கோ போலோ, யுவான் சுவாங், பாஹியான் என்றுமட்டும் எழுதிவிட்டு அரை மதிப்பெண் வாங்கியவர்களுக்கெல்லாம் அதிர்ச்சி. வினாத்தாளில் பகுதிமாற்றி கேட்கப்பட்டுவிட்ட கேள்வி என்றும் குறைந்தபட்சம் அவர்களைப் பற்றிய சிறுகுறிப்பு ஏதாவது எழுதியிருந்தால் மட்டுமே அரைக்கும் அதிகம் என்று ஆசிரியர் சொல்லிவிட்டார். மிஞ்சிமிஞ்சிப் போனால் அவர்களின் சொந்த நாடு எதுவென்பதும் எவரின் ஆட்சிக்காலத்தில் வந்தார்கள் என்பதும் தவிர அவர்களைப் பற்றிய குறிப்புகளேதும் எங்கள் பாடப்புத்தகங்கள் சொல்லியிருக்கவில்லை. அடுத்தடுத்த வகுப்புகளிலும் இந்நிலைகளில் மாற்றமில்லை. பத்தாம் வகுப்பிற்குப் பிறகு அவர்கள் எல்லாரும் வெறும் பெயர்களாக மட்டுமே நினைவில் தங்கிவிட்டது, நமது கல்விமுறையின் தோல்வியன்றி வேறில்லை.

யாத்ரீகர் பயணி தூதர் என்ற பதங்களால் பெரும்பாலும் அறியப்படும் இவர்களைப் பற்றி நிதானமாக மறுபரிசீலனை செய்ய சென்ற ஆண்டு நான் படித்த மூன்று புத்தகங்கள் உதவின. முதலாவது புத்தகம் - கோடுகள் இல்லாத வரைபடம் - எஸ்.ராமகிருஷ்ணன் - உயிர்மை பதிப்பகம். யாத்ரீகனுக்கும் அவன் சொந்த நாட்டில் அவனை எதிர்பார்த்து அவனுக்கென்று ஒரு குடும்பம் இருக்கும் என்றும், உலக எல்லைகளே வரையறுக்கப்படாத அக்காலத்தில் மதம் - வியாபாரம் - தூது - தேடல் - அறிவியல் என்று ஏதோவொன்று அவர்களின் பயணத்திற்குப் பின்புலமாக இருந்திருக்கிறது என்றும், மொழி - கலாச்சாரம் - பூகோளம் என்று அவர்கள் எதிர்கொள்ள தடைகள் பல இருந்தன என்றும் யோசிக்க வைத்த புத்தகம் அது. எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் அவருக்கே உரிய பாணியில் இன்றைய ஊர்சுற்றிகளுக்கெல்லாம் முன்னோடிகளை ஆவணப்படுத்தியிருக்கும் நல்ல புத்தகம்.

இரண்டாவது புத்தகம் - The Enchantress of Florence - சல்மான் ருஷ்டி. யாத்ரீகர்களைப் பற்றிய எனது அறிவை அடுத்த நிலைக்குக் கொண்டுபோன அற்புதமான புதினம். அமெரிக்கா போன்ற அறியப்படாத பிரதேசங்களைக் கண்டுபிடித்ததும் இந்தியா போன்ற தேசங்களுக்கு மாற்றுவழி கண்டுபிடித்ததும் அவர்கள்தான் என்றாலும், சிபிலிஸ் ஸ்கர்வி பிளேக் போன்ற நோய்களைக் கண்டம்விட்டுக் கண்டம் கடத்தியதும் அவர்களே. கடலில் இருக்கும் அரக்கன் படகைக் கடித்துவிடுவான் எனவும், பூமத்திய ரேகையில் கடலில் நெருப்பெரியும் எனவும், மேற்குக் கடைசியில் கடலில் சகதி இருக்கும் எனவும், தட்டையான பூமியின் விளிம்பில் கப்பல் கவிழ்ந்துவிடும் எனவும் இருந்த மனிதகுல நம்பிக்கைகளைப் பொய்யாக்கியதும் அவர்களே.

இந்த இரண்டு புத்தகங்களின் துண்டுதலினால்தான் சென்ற வருடம் வாஸ்கோடா காமா (கோவாவில் ஒரு நகரம்) முதல் கப்பாடு (வாஸ்கோடா காமா முதலில் கால்பதித்த இந்திய மண்)வரை, வாஸ்கோடா காமாவின் எதிர்த்திசையில் பயணித்துப் பார்த்தேன்.

23ம் புலிகேசி திரைப்படம் பார்த்தவன் என்பதாலும், தற்போதைய இந்திய அரசியலை உற்றுக் கவனித்துவரும் ஒரு சாமானியத் தமிழன் என்ற வகையிலும் இவ்விரு புத்தகங்கள் முலம் நாம் தெரிந்து கொண்டது - சமகாலத்தில் வாழ்ந்த உள்நாட்டுக்காரனால் சொல்லப்படும் கல்வெட்டுகளைவிட யாத்ரீகன் என்ற அந்நியனால் சொல்லப்பட்டவை நம்பத்தகுந்தவை. வரலாற்றுப் பாடங்கள் பெரும்பாலும் அப்படிப்பட்ட யாத்ரீகர்களின் குறிப்புகளில் இருந்து எடுக்கப்பட்டவை என்பதைச் சமீபத்தில்தான் தெரிந்து கொண்டேன். கிறித்தவ பாதிரியாருக்கான படிப்பில் Theologyல் இப்படியொரு பாடம் உண்டென்றும், சீடர்கள் எழுதிய விவிலியத்தையும் அதே காலத்தில் வாழ்ந்த மற்றவர்கள் சொன்ன இயேசுகிறித்து பற்றிய குறிப்புகளையும் அது ஒப்பிடுவதாகவும் கேள்விப்பட்டிருக்கிறேன்.

மூன்றாவது புத்தகம் - In the Country of Gold-digging Ants - அனுகுமார் என்ற வரலாறு படித்த ஆசிரியர் எழுதியது. 11 யாத்ரீகர்களைக் காலவரிசையில் அவர்களைப் பற்றி அனைத்துத் தகவல்களையும் தருகிறது இப்புத்தகம். பிறந்த இடம் - வருடம், எழுதிய குறிப்புகளின் தொகுப்பின் பெயர், பயணத்திற்கான காரணம், நிதியுதவியவர்கள், உடன்வந்தவர்கள், சென்ற இடங்கள், கவனித்த விசயங்கள், இறந்த இடம் - வருடம் எல்லாம்.

வெறும் குறிப்புகள் மட்டுமே தொகுக்கப்பட்டு மற்றொரு வரலாற்றுப் புத்தகம் என்று ஒதுக்கப்படாமல் இருக்க, தனக்கென்று ஒரு பாணியைக் கையாண்டிருக்கிறார் ஆசிரியர். பின்னட்டையில் 'இந்திய வரலாறு சலிப்புட்டுவதாக நினைக்கிறீர்களா?' என சவால் விடுகிறார். பாடப்புத்தகங்களில் சொல்லித்தர முடியாத யாத்ரீகர்களால் குறிப்பிடப்பட்ட அன்றைய இந்தியாவைப் பற்றி அதிகம் பேசுகிறது புத்தகம். பின்னட்டையில் சில உதாரணங்களும் உண்டு.

இந்தியாவில் மாமிசம் உண்ணும் சில எறும்புகள் தங்கமிருக்கும் இடங்களில் குழிதோண்டுவதாக ஒரு யாத்ரீகர் குறிப்பு. காஷ்மீரத்து மக்கள் மந்திரங்கள் மூலம் காலநிலைகளையும் இரவுபகலையும் மாற்றும் சக்தி படைத்தவர்களாகவும் ஒரு குறிப்பு. எனக்குப் பிடித்த ஒரு குறிப்பு - நினைத்தாலே சிரிக்கவைக்கும் குறிப்பது. பீதரின் (Bidar - இன்றைய கர்நாடகாவின் ஒரு வடகிழக்கு மாவட்டம்) அரசன் ஒருவன் 10000 குதிரைப்படை வீரர்களுடன் 50000 காலாட்படை வீரர்களுடன் 200 யானைகளுடன் 300 குதிரைகளுடன் 100 குரங்குகளுடன் 100 அந்தப்புரத்து மகளிருடன் வேட்டைக்குப் போயிருக்கிறான். இன்றும் இதேபோல நடக்கத்தான் செய்கிறது! ஆனால் சிரிக்கத்தான் முடியவில்லை!

புத்தகத்தின் ஒவ்வொரு பக்கமும் தகவல்கள்தான். மதுரை ஒரு பெண்ணால் ஆளப்பட்டதென்கிறார் மெகஸ்தனிஸ். வழக்கம்போல் வரலாற்றாசிரியர்கள் இதை மறுக்கிறார்கள். இன்றைய இந்தியாவில் பாரம்பரியக் கலைப்படைப்புகளாக அடையாளப்படுத்தப்படும் அஜந்தா குகைகளும், காளிதாசனின் சகுந்தலை போன்ற படைப்புகளும் உயர்குடிமக்களின் பெருமைக்காகப் படைக்கப்பட்டவை எனவும் மற்றவர்கள் ஏழ்மை வாழ்க்கை வாழ்ந்ததாகவும் குறிப்பிடுகிறார் பாஹியான். ஆதாமின் கல்லறை சிலோனில் இருக்கிறதென்கிறார் அதானாசியஸ் நிகிதின். காஷ்மீரத்து மக்கள் எந்த விலங்கினத்தையும் துன்புறுத்துவதில்லை என்றும், இரத்தம் சிந்தாத வாழ்க்கைமுறையை மேற்கண்டார்கள் என்றும் மார்கோ போலோவே சொல்லியிருக்கிறார்!

ஓர் அரசனை எவனோ கொல்ல முயல, இந்தக் காலத்தைப் போலவே அப்போதும், சந்தேகத்தின் பெயரில் 5000 பேர் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். ஒற்றைக் கொம்புக் குதிரைகளும், கருப்புநிறச் சிங்கங்களும் இருந்திருக்கின்றன. ஒரு காலத்தில் அந்த இடம் கடலாக இருந்திருக்க வேண்டும். மலரிதழ்கள் 3 -4 -5 -6 -18 என்ற எண்ணிக்கையில் மட்டும்தான் இருக்கின்றன; 7 அல்லது 9 என்ற எண்ணிக்கையில் இல்லவே இல்லை. இவையெல்லாம் இந்தியாவைப் பற்றித் தாம் கண்ட காட்சிகளாக யாத்ரீகர்கள் குறித்துக் கொண்டவை. இந்தியாவில் போர்முடித்து நாடுதிரும்பிய அலெக்சாண்டரின் படைவீரர்கள், இந்தியர்களின் விந்து கருப்புநிறமானதென்று செய்தி பரப்பியதாக சல்மான் ருஷ்டி தனது Salimar the clown புத்தகத்தில் சொல்கிறார்.

யாத்ரீகர்கள் நாடுகளின் எல்லைகளைக் கடக்கும்போது விசா மாதிரி அனுமதி வாங்க, மாதக்கணக்கில் காத்திருந்திருக்கிறார்கள். அவர்களும் வழிதவறி பாலைவனங்களிலும் கடல் நடுவிலும் உயிருக்காகப் போராடி இருக்கிறார்கள். நம்மூர் சத்திமுத்திப் புலவர் பாணியில் வாழும் காலம்கூடத் தெரியாமல் புலம்பிய குறிப்புகளும் உண்டு. யாத்ரீகர்கள் சிலரை நாடு திரும்பியவுடன் தலைக்குமேல் தூக்கிவைத்துக் கொண்டாடியிருக்கிறார்கள். நிலவில் ஓரிடம், பீர், புகைவண்டி என்று அவர்களின் பெயர்சூட்டி கவுரவித்திருக்கிறார்கள். இவர்களின் சில குறிப்புகளைச் சொந்த நாட்டவர்கள் கதைக்கட்டும் பேர்வழி என்று கிண்டல் செய்திருக்கிறார்கள். தேங்காய், முதலை போன்ற ஐரோப்பியர்கள் கேள்விப்பட்டிராத விசயங்களை இந்தியாவில் பார்த்ததாக மார்கோ போலோ சொன்னபோது, நம்பமுடியாத கதைகட்டிவிடுபவர்களைக் குறிக்கும் 'Its a Marco Polo' என்ற சொல்லாடலையே உருவாக்கிவிட்டார்கள்!

ஒரு யாத்ரீகரின் இந்தியா பற்றிய குறிப்பிது: 'பூமியின் சுற்றளவை 100% துல்லியமாக கணித்த அதே மக்கள்தான், அதே பூமி ஒரு மீனின்மீது நிற்கும் பசுவின் கொம்புகளில் தாங்கப்பட்டிருப்பதாக நம்புகிறார்கள்'.

கிமு 321 முதல் கிபி 1997 வரை பயணிக்கிறது புத்தகம். இரண்டு பெண் யாத்ரீகர்களும் உண்டு. கால்நடை, கப்பல், புகைவண்டி என்று காலம் மாறமாற பயண முறைகளும் மாறியிருக்கின்றன. நமெக்கெல்லாம் மிகவும் பரிட்சயப்பட்ட வாஸ்கோடா காமா இப்புத்தகத்தில் இல்லை.

30 நாட்களில் மொழி சொல்லித்தரும் புத்தகங்கள், நோய்த்தடுப்பு மருந்துகள், அட்வான்ஸ் புக்கிங், கூகிள் மேப், GPS, திட்டமிட்ட பாதை எதுவும் தெரியாத சிலர் நாடுகளுக்கிடையே நட்புறவை வளர்த்துவிட்டு உலகை எப்படிச் சுருக்கிப்போனார்கள் என்று படித்துப் பாருங்கள். கூச்சப்படாமல் எவருக்கும் பரிசளிக்கத்தகுந்த தரமான புத்தகம்.


- ஞானசேகர்
(http://jssekar.blogspot.com/)

No comments: