Sunday, December 25, 2011

82. புலிநகக்கொன்றை

-------------------------------------------------------------
புத்தகம் : புலிநகக்கொன்றை
ஆசிரியர் : பி.ஏ.கிருஷ்ணன்
வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம்
முதல் பதிப்பு : டிசம்பர் 2002
விலை : 175 ரூபாய்
பக்கங்கள் : 334
-------------------------------------------------------------


கதைகள் அவை நிகழும் காலத்தை உணர்த்த வேண்டும் என்று அடிக்கடி சொல்லும் ஒரு நண்பர் எனக்கிருக்கிறார். அதிலும் குறிப்பால் உணர்த்தப்படுவது ஓர் அழகு. ஆனால் அத்தனை எளிதாகக் கதைகளில் இது சாத்தியப்படுவதில்லை. படிக்கும் கதைகளில் மிகச்சிலவே இதனை அழகியலோடு வெளிப்படுத்தி வெற்றி பெறுகின்றன. காட்சி ஊடகத்தில் காலத்தைச் சொல்வது வேறுவிதமான சவால். ஆனால் இன்றைக்கு இருக்கும் தொழில்நுட்பங்களால் அது வெகு எளிதாகவே அரங்கேற்றப்பட்டு விடுகிறது. அத்தகைய காட்சி ஊடகங்களிலும் உரையாடல்களால் காலத்தைத் தெரிவிக்கும் உத்தி எப்பொழுதாவது காணக்கிடைக்கிறது. தவமாய் தவமிருந்து திரைப்படத்தில் தன் மகனைக் காணாமல் தவிக்கும் தாய், ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட நாள் என்று அந்நாளை அடையாளப்படுத்தும் வசனம் ஒரு நல்ல உதாரணம்.

கதையின் போக்கோடு கால மாற்றங்களைப் பதிவு செய்யும் பணியையும் சில படைப்புகள் செய்கின்றன. அவ்வகையில் அமைந்த 'வெட்டுப்புலி' புதினத்தைப் பற்றி முன்பே பேசியிருக்கிறேன். அந்த வரிசையில் இன்னுமொரு புதினம், இப்புலிநகக்கொன்றை. ஆங்கிலத்தில் 'TIGER CLAW TREE' என்ற பெயரில் இப்புதினத்தை எழுதியவர் திரு.அனந்த கிருஷ்ணன். அவரே தமிழிலும் மொழி பெயர்த்து இந்நூலை வெளியிட்டிருக்கிறார். திருநெல்வேலி மாவட்டத்தில் நாங்குநேரியில் வாழ்ந்த ஒரு தென்கலை ஐயங்கார் குடும்பத்தின் நான்கு தலைமுறைகளின் கதையே இப்புதினம். பல தலைமுறைகளுக்கு முன்னால் ஒரு அரசனுக்குச் செய்த துரோகம் சாபமாகத் தொடர்வது குறித்த பயம் இக்குடும்பத்தின் பின்னணி.

இலக்கிய வடிவங்களின் அடிப்படை விதிகளில் புதினத்திற்கானது அதற்குள்ள காலச்சுதந்திரம். ஒரு நாளில் தொடங்கி ஓராயிரம் ஆண்டுகாலம் வரை உள்ளடக்கம் கொள்ளத்தக்கது புதினம். எந்தப் புத்தகத்திலும் நம்மைக் கவரக்கூடிய மிக முக்கியமான அம்சம் ஒன்று இருக்கும். இப்புத்தகத்தில் என்னை முதலில் மிகக் கவர்ந்த அம்சம், ஆரம்பப் பக்கமொன்றில் இடம்பெற்றிருக்கும் பாத்திரங்களின் தலைமுறை வரைபடம். இத்தனை தலைமுறைகளின் கதை என்கிற உண்மையே வாசகனை முற்றிலுமாய்க் கவர்ந்து விடுவதற்குப் போதுமானதாக இருக்கக் கூடும்.



படுக்கையில் கிடந்தபடி தன் அந்திமக் காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கும் பொன்னா பாட்டியிடமிருந்து தொடங்குகிறது கதை. அவளின் இளமைக் காலத்தைத் தொட்டு, அதற்கான பின்புலங்களைச் சொல்லி, பின் அவளது மகன்கள், பேரன்கள் மற்றும் கொள்ளுப் பேரன்கள் வரையிலான காலத்தின் பதிப்பாக நகர்கிறது கதை. கட்டபொம்மன் தூக்கிலடப்படுவது, ஊமைத்துரை சிறை செய்யப்படுவது, வ.உ.சிதம்பரனார் கப்பல் வாங்குவது போன்ற சில வரலாற்று உண்மைச் சம்பவங்கள் கதையின் சக நிகழ்வுகளாகப் புகுத்தப்பட்டிருப்பது சுவை. அதிலும் குறிப்பாக கதையின் சில பாத்திரங்கள் சிதம்பரனாரின் சுதேசிக் கப்பல் வியாபாரத்தில் முதலீடு செய்வதும் உண்டு.

புதினத்தின் பெரும்பலமாக நான் கருதுவது இதிலிருக்கும் பெண் பாத்திரங்கள். எப்படி பாலச்சந்தரின் பெண் பாத்திரங்கள் திரை ரசிகர்களிடம் ஒருவித பாதிப்பை ஏற்படுத்த வல்லவர்களாக இருக்கிறார்களோ, அத்தகையதொரு பாதிப்பை ஏற்படுத்தும் வல்லமை இப்புதினப் பாத்திரங்களுக்கும் உண்டு. உடனே பாலச்சந்தரின் பெண் பாத்திரங்களை மனதில் கொள்ள வேண்டாம். இவர்கள் வேறு பெண்கள். இள வயதில் பேரழகியாக இருந்து, பணக்காரக் குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டு, பிள்ளைகள் பிறந்த பிறகு கணவனை இழந்து பின் அவர்களுக்காகவே வாழும் ஒரு பெண், சிறுகுழந்தை வயதில் திருமணமான புதிதிலேயே கணவனை இழந்து பருவ வயதில் காமம் மேலிட்டு, பின் மன நிலை பிறழ்ந்து மருத்துவமனையிலேயே கரைந்து போகும் ஒரு பெண், கணவனின் கனவுக்காக அவன் இறந்த பிறகும் போராடும் ஒரு பெண், மனம் நிறைய காதலுடன், ஆனால் அறிவு நிலை மாறாத யதார்த்தவுருவாக ஒரு பெண், என்று எங்கும் நீக்கமற நிறைகிறாள் பெண்.

உப்புச்சப்பற்ற காரணத்துக்காக ஜீயர் மடத்திலிருந்து வெளியேற்றப்பட்ட ஒருவருக்காக, சம்மந்தப்பட்டவர்கள் இறந்தும் பல ஆண்டுகள் போராடி வெற்றி பெறும் ஒரு வழக்கறிஞர், யாராவது ஒரு பெண்ணை நிர்வாணமாகப் பார்க்க வேண்டி மலம் அள்ளும் ஒரு பெண்ணை அணுகி, பின் விளைவுகளால் அவமானப்பட்டு தற்கொலை செய்துகொள்ளும் ஒரு இளைஞன், தாயற்ற கைக்குழந்தையையும் தாய், சகோதரர்களையும் விட்டு விலகி நெடுங்காலம் காணாமல் போய் என்றாவது திரும்பி வருவான் என்று நம்புபவர்களின் நம்பிக்கையில் வாழ்ந்து வரும் ஒருவன், போன்ற வினோதமான பாத்திரங்கள் நிறைய கதையோடு வருகிறார்கள்.

உரையாடல்களிலும், விவரணையிலும் கலந்திருக்கும் மெல்லிய அரசியல் நகைச்சுவைகள் ரசிக்கத்தக்கவை. திராவிட இயக்கங்கள், காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் இயக்கங்களின் மீதான தாக்குதல் நகைச்சுவையாகவே அரங்கேறிவிடுகின்றது. அதிலும் தி.மு.க.வை அதிகமாகவே தாக்கியிருக்கிறார். அ.தி.மு.க. உள்ளிட்ட மற்ற தி.மு.க கள் கதை நிகழும் காலத்தில் வெறும் தி.மு.க.விற்குள்ளேயே அடக்கம் என்பது இங்கு கவனத்திற்கொள்ளத்தக்கது. தி.மு.க.வும் அலங்கார அடுக்கு மொழியும் இரண்டாகப் பிரிக்க இயலாதவை. அது ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்திற்கு சிறந்த உதாரணமாக ஒரு இளைஞன் வருவான். ஆரம்பத்தில் தீவிர தி.மு.க. அனுதாபியாக வரும் இவன் ஒரு கட்டத்தில் யதேச்சையாக இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொள்ளாமலேயே காவல்துறையினரிடம் அடிவாங்கி பெரிய தியாகியாகிவிடுவதாக கதை நகரும். அப்பொழுது அண்ணா எழுதியதாக வரும் ஒரு கடிதம் நான் நினைத்து நினைத்துச் சிரித்த நகைச்சுவைகளில் ஒன்று. 'தம்பி, தலைவணங்குகிறேன். இந்திப் பலிபீடத்தில் இன்னுயிரை மதிக்காமல் நீ இதயத்தைப் பிளந்து வைத்த செயலை இந்த நாடும் வீடும் போற்றும். புகழும். இரும்பு நெஞ்சத்தவர் இகழலாம். ஆனால் ரத்தத்தால் எழுதப்படும் எங்கள் தியாக வலாற்றில் உனக்கு நிச்சயம் இடம் உண்டு'. ஒரு தலைமுறையே இந்த அடுக்கு மொழிக்கு அடிமையாகிக் கிடந்திருக்கிறது என்பது எவ்வளவு மோசமான நிலை! தானாகக் கிடைத்த தியாகிப் பட்டத்தை நன்றாகவே பயன்படுத்தி பிரபலமாகிவிடுவான் இந்த இளைஞன். அது போல் நிஜத்திலும் கூட எத்தனையோ பேரைச் சுட்டிக்காட்ட முடியும். ஆனால் அந்த இளைஞனே பின்னாளில் கம்யூனிஸ்ட் ஆகிவிடுவான் என்பது வேறு கதை.

கதையில் திருநெல்வேலியில் இருக்கும் த.தி.தா.கல்லூரி (உண்மையில் இப்படி ஒரு கல்லூரி இருப்பதாகத் தெரியவில்லை. இருக்கும் ஏதோ ஒரு கல்லூரிக்கான புனைப்பெயராக இருக்கக்கூடும்.) ஒரு பாத்திரம் அளவுக்கு முக்கியத்துவம் பெற்று வருகிறது. கதைக்காலத்து மாணவர்களின், இளைஞர்களின் மனநிலை இக்கல்லூரியை வைத்து தெளிவாகிறது. ஒரு ஆங்கிலேயரை முதல்வராகக் கொண்டிருக்கும் இக்கல்லூரியில் நிகழும் சம்பவங்கள் உண்மை நிகழ்வுகளை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டவையாகவே உணரமுடிகிறது.

ஒரு சீரான காலவரிசையில் அமையாமல் ஒரு காலயந்திரத்தின் வீச்சு போல நம்மை வெவ்வேறு காலங்களுக்கு அலைவுறுத்தும் உத்தி, வாசிப்பு முழுவதும் நம்மை விழிப்புடனே வைத்திருப்பதற்காகத்தான் எனத் தோன்றுகிறது. சமீபத்தில் நான் வாசித்த புத்தகங்களிலேயே மிகச் சுவாரஸ்யமானது இது தான். கதைகளே இல்லாமல் வெளிவரும் திரைப்படங்களையும், அபத்தமான கதைகளுடனும் வசனங்களுடனும் வெளிவரும் நெடுந்தொடர்களையும் பார்க்கும்பொழுது எழுத்துலகில் இருந்து இக்காட்சி ஊடகங்கள் எந்த அளவுக்கு விலகியிருக்கின்றன என்பது புலனாகும். நான்கு தலைமுறைகளின் கதை என்பதோடு, ஏராளமான கிளைக்கதைகளோடு வடிக்கப்பட்டிருக்கும் இப்புதினம் எத்தனையோ காட்சி ஊடகப் படைப்புகளுக்கு விதையாகலாம்.

அனுபந்தம் :

1. 1960 - 70 களில் கம்யூனிஸ்டுகளின் மீது இருந்த பார்வை மற்றும் அவர்களின் நிலை குறித்தான தேடுதலை இந்தப் புதினம் ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கான ஒரு நல்ல புத்தகத்தை வாசித்த நண்பர்கள் பகிர்ந்து கொள்ளவும்.

2. இதில் வரும் கண்ணன் என்கிற பாத்திரம் ஆசிரியரே தானோ என்ற எண்ணம் மேலிடுகிறது. உண்மையாகவும் இருக்கலாம்.

3. சில வசனங்களை அவற்றின் சாரம் குறையக் கூடாது என்று ஆங்கிலத்திலேயே கொடுத்திருக்கிறார். ஆனாலும், இன்னும் பல விஷயங்களை ஆங்கிலத்தில் எப்படிப் படைத்திருக்கிறார் என்ற ஆர்வம் இதன் ஆங்கில மூலத்தையும் வாசிக்கத் தூண்டுவதாகயிருக்கிறது.

-பா.சேரலாதன்

(http://www.seralathan.blogspot.com)

No comments: