Sunday, April 07, 2013

104. ஆழி சூழ் உலகு


பெருங்கடல் வேட்டத்துச் சிறுகுடிப் பரதவர்களுக்காக‌)
--------------------------------------------------------------------------------------------------------------------------
புத்தகம் : ஆழி சூழ் உலகு (புதினம்)
ஆசிரிய‌ர் : ஜோ டி குருஸ்
வெளியீடு : தமிழினி
முதற்பதிப்பு : டிசம்பர் 2004
விலை : 430 ரூபாய்
பக்கங்கள் : 551 (தோராயமாக 40 வரிகள் / பக்கம்)
வாங்கிய இடம் : New Book Lands, வடக்கு உஸ்மான் சாலை, தியாகராய நகர், சென்னை
--------------------------------------------------------------------------------------------------------------------------
சென்ற பதிவில் சொன்னது போல், சென்னை வந்தபின் சென்ற வருடம் ஜூலையில் நான் முதன்முதலில் கலந்துகொண்ட பொது நிகழ்ச்சி காலச்சுவடு பதிப்பகத்தின் நான்கு புத்தகங்களின் வெளியீட்டு விழா. மறுநாள், ஞாயிற்றுக்கிழமை, லயோலா கல்லூரியில் இரண்டாவது பொது நிகழ்ச்சி. பூவுலகின் நண்பர்கள் நடத்திய ஐந்திணைச் சுற்றுச்சூழல் விழா. நம்மாழ்வார் போன்ற சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பலரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. பசுமைப் புரட்சியின் வன்முறை, மணல் கோட்டைகள் போன்ற சுற்றுச்சூழல் பற்றிய சில நல்ல புத்தகங்கள் கிடைத்தன. இரண்டு நாட்கள் நடந்த விழாவில், நான் சென்ற நாளில் பாலையும் நெய்தலும் விவாதத் திணைகள். அதுவரை புத்தகங்களில் மட்டுமே நான் படித்திருந்த தியோடர் பாஸ்கரன் அவர்கள் பாலைத்திணை பற்றி பேசினார். நெய்தற்திணை பற்றி பேசிய பேராசிரியர் வறீதையா கான்ஸ்தந்தின் மற்றும் ஜோ டி குருஸ் இருவரும் எனக்கு அன்றுதான் அறிமுகம். அவர்களிடம் இருந்து இரு புத்தகங்கள் குறித்துக் கொண்டேன். வறீதையா அவர்களின் 'என்னைத் தீண்டிய கடல்' தம்பி சேரல் தந்தார். ஜோ டி குருஸ் அவர்களின் 'ஆழி சூழ் உலகு' கேட்கப்பட்ட கடைகளில் எல்லாம் அச்சில் தற்போது வருவதில்லை என்றார்கள். 4 மாதங்களுக்குப் பின் கிடைத்தது.
(https://www.nhm.in)
ஆழி சூழ் உலகு. ஆழி என்றால் கடல் என்று என்னைப் போல் பலர் தவறாகப் புரிந்திருக்க வாய்ப்புண்டு; முழுக் கடல் அல்ல; கடலின் ஒரு பகுதி. கடலில் நுரை பொங்கும் பகுதிக்கு ஆழி என்று பெயர். மன்னார் வ‌ளைகுடாவில் மண‌ப்பாடு மற்றும் கூடங்குளத்திற்கு இடையே இருக்கும் ஆமந்துறை என்ற பரதவர்களின் துறைதான் கதைக்களம். ஆமைகள் கடலில் இருந்து கரைக்கு வந்து கூட்டங்கூட்டமாக முட்டையிடும் பகுதி என்பதால் ஆம‌ந்துறை என்ற பெயர். இருட்டில் கடலில் இருந்து கரை தெரிவதற்காக மின்சாரம் இல்லாத காலத்தில் ஆமை ஓட்டில் ஆமை நெய்யை உருக்கி திரி போட்டு எரிப்பதாலும் ஆமந்துறை என்ற பெயர். கடற்கரையில் இருந்து பார்த்தால் கிழக்கே மணப்பாடு துறையும் தென்மேற்கே கூத்தன்துறையும் கடலுக்குள் தெரியும். இவ்விரு ஊர்களுக்கும் இடையே கடற்கரை உள்நோக்கி வளைந்து இருப்பதால் புயல் காலங்களில் அதிக சேதம் ஏற்படாத பகுதி. இப்பகுதியில் ஒரு மைல் தூரம் வரை பாறைகளால் அலைகள் ஆர்ப்பரிக்கும் ஆழியாக இருப்பதால் இயந்திரப் படகுகள் இயக்க முடியாது; கட்டுமரம் மட்டும்தான். ஆமந்துறை பரதவர்களின் வாழ்க்கையைக் கடலிலும் கரையிலும் பேசுகிறது புதினம்; 1933 முதல் 1985 வரை 6 அத்தியாயங்களில் வருடாவாரியாக‌ கிட்டத்தட்ட 4 தலைமுறைகளின் கதை.

கவுரு துளவை மாசா தாமான் மறுக்கு கோடா பருமல் அணியம் மையாவடி போன்ற நெய்தல் வார்த்தைகளால் ஆரம்பப் பக்கங்களை மெதுவாகப் படிக்க நேர்ந்தாலும், அவை பரிட்சய‌மான பின், ஆமந்துறையின் மக்கள் அறிமுகமான பின், வாசிப்பின் வேகத்திற்கு எவ்வித தடையும் கொடுக்காத கதைக்களம். இதுதான் ஆரம்பம், இதுதான் இலக்கு, இதுதான் கதை என்று சுருக்கிச் சொல்ல எதுவுமில்லை. புதினத்தின் ஓட்டத்தில் சிறுகதைகளை வெட்டி எடுத்து கோர்த்துக் கொள்ளும் பொறுப்பை வாசகனுக்கே விட்டுவிட்டார் ஆசிரியர். புதினத்தின் சுவாரசிய‌த்திற்கு அதுவும் ஒரு காரணம். முழுக்க முழுக்க பரதவர்களின் வாழ்க்கையைச் சொல்லும் புதினம் என்பதால், கடல், அரசு, சாதி, மதம், மூட நம்பிக்கைகள், பக்கத்துத் துறைகள் என்று பல தளங்களில் அவர்களின் அன்றாட வாழ்வியல் பிரச்சனைகளைப் பேசுகிறது. சர்வதேசக் கடல் எல்லை என்று மாயக் கோடு போட்டுக் கொண்டு, ஆழ்கடலில் பன்னாட்டு மீன்பிடிக் கப்பல்களை அனுமதித்து கடல்வளம் சுரண்டப் படுவதையும் சொல்கிறது.

மண‌ப்பாடு தூத்துக்குடி திருவைகுண்டம் சோதிக்காவிளை தச்சன்விளை காவல்கிணறு இடிந்தகரை கூடங்குளம் இடையன்குடி குலசேகரப்பட்டணம் மற்றும் நாரோயில் (நாகர்கோயில்) போன்ற ஊர்களுக்கும், கச்சத்தீவுக்கும், கன்னியாக்குமரியில் இருந்து 15கிமீ தொலைவில் ஆழ்கடலில் தனியே உயர்ந்து நிற்கும் சுறாப்பாறைக்கும் கதை கூட்டிச் செல்கிறது. நம்ம வள்ளியூர் கோழிச்சண்டை முதல் இலங்கை இனக்கலவரம் வரை பேசுகிறது புதினம். நாடார் பரதவர் சாதிச்சன்டைகள், பரதவத் துறைகளுக்கு இடையேயான சண்டைகள் பற்றியும் பேசுகிறது. சணல்வலை, பருத்தி நூல் வலை, டிஸ்கோ வலை என்று காலத்தால் மாறிப்போன பொருட்களையும், காலத்திற்கு ஏற்றாற் போல் கிடைக்கும் மீன்களையும் சொல்கிறது.

கடலிலும் காற்றிலும் போராட்டமே வாழ்க்கை என்று கொண்டு இயல்பிலேயே அசாத்திய துணிச்சலுடன் இருக்கும் பரதவர்களுடன், நம்மையும் கடலுக்குள் கூட்டிச் செல்கிறது புதினம். சத்தியத்திற்குக் கட்டுப்பட்ட பெரிய மீன்கள், தலைப் பகுதியில் ஒரு பகுதியில் ஒளி வீசும் மின்சார மீன்கள், இலட்சக்கணக்கில் சாளை மீன்கள், ஆயிரக்கணக்கில் கடற்குதிரைகள், ஒரு பூந்தோட்டமே மலர்ந்தது போல பல வண்ணங்களில் பல வடிவங்களில் கற்பனை செய்து பார்க்க முடியாத அழகில் பற்பல மீன்கள், கிரீச்சிட்டுப் பறக்கும் இனம் புரியாத பறவைகளின் விநோத ஒலிகள் என அடுத்தடுத்து காட்டுகிறது புதினம், பக்கத்திலேயே மரணத்தையும் வைத்துக் கொண்டு!
(http://www.uyirmmai.com)
'முத்துக் குளித்துறைப் பரதவர்களின் வாழ்வில் ஒளியேற்றி வழிநடத்திய புனித பிரான்சிஸ் சவேரியாருக்கும் அவர் வழிவந்த சேசு சபைக் குருக்களுக்கும் இந்நூல் காணிக்கை' என்கிறது ஆரம்பப் பக்கம். மொத்த புதினத்திலும் ஒரே ஒரு நல்ல பாதிரியார் தான் இருக்கிறார். எதார்த்தம் அதுதான். மீதி பாதிரியார்களுக்கு இடையே இருக்கும் கள்ளக்காதல்களையும் பொருள்வெறியையும் அற்புதமாக சொல்லி இருக்கிறார் ஆசிரியர். சேற்றுக்குள் முளைக்கும் இதுபோல செந்தாமரைப் பாதிரியார்களை மட்டுமே நம்பி தங்கள் ஆன்மீகத்தைத் தொடரும் மக்களின் எண்ணத்தை அற்புதமாகச் சித்தரித்து இருக்கிறார். ஐந்திணைச் சுற்றுச்சூழல் விழாவில் நெய்தலில் பேசிய மூன்றாமவர் கூட, கத்தோலிக்க லயோலா கல்லூரியில் தைரியமாக பரதவக் கிறித்தவர்கள் பாதிரியார்களால் ஏமாற்றப் படுவதைப் பற்றி பேசினார்.

பல வித்தியாசமான உயிரினங்களும், அவற்றின் வித்தியாசமான பண்புகளும் புதினத்தில் நிறைய உள்ளன. உதாரணமாக, நமக்கெல்லாம் தெரிந்த டால்ஃபின் என்ற ஓங்கல். ஓங்கல்கள் (Dolphin) காந்தி போல மிகவும் சாதுவானவை. கடலில் யாராவது தவறி விழுந்தால் அவர்களைக் காப்பாற்ற ஓங்கல்கள் பாய்ந்து வருமாம். இந்த ஓங்கல்கள் எல்லாம் முற்பிறவியில் மனிதர்களாய் இருந்தவை என்று கதைகதையாகச் சொல்வார்கள். இதனால்தானே என்னவோ பரதவர்கள் ஓங்கல்களைச் சாப்பிடுவதில்லை. அவற்றைப் பிடிப்பதும் இல்லை. சில நேரங்களில் இவை வலைகளைக் கிழிப்பதுண்டு. இருந்தாலும் பரதவர்களுக்கு இந்த மீன்கள் மேல் பாசம்தான். கடலில் ஆள் விழுங்கி சுறாக்களை எதிர்க்கும் வலுவுள்ளவை இந்த ஓங்கல்கள் மட்டும்தான். எனது உப தகவல் ஒன்று; ஓங்கலுக்கும் மனிதனுக்கும் ஒரு மிகப் பெரிய ஒற்றுமை உண்டு. உடலுறவு என்ற விசயத்தை ரசித்து இன்பத்திற்காக செய்யும் இரண்டே உயிரினங்கள்! ஓங்கல்களை அழகான துள்ளலுடன் மழலைத் தனத்துடன் பார்த்திருப்பீர்கள். இறந்த  ஓங்கல் ஒன்றின் அழுகிய உடலை, நான் சென்னை மீனவக் கிராமம் ஒன்றில் இருந்து ஒரு பின்னிரவில் நான் எடுத்த புகைப்படம் இது:

பஞ்சாமையின் இறைச்சி பஞ்சுபோல் மென்மையாய் இருக்கும். கடலில் மாட்டிக் கொண்டவர்கள் பசி போக்க‌ அதன் கழுத்தைக் கடித்து இரத்தத்தைக் குடிப்பதாக‌வும், இறைச்சியைத் தின்பதாகவும் புதினத்தில் வருகிறது. கல்லூரி மாணவர்களுடனும் சில வெளிநாட்டவர்களுடனும் கலந்துரையாட கிடைத்த ஒரு வாய்ப்பில், ஆமை பற்றிய பேச்சு வந்த போது, நான் இரண்டு தகவல்கள் சொன்னேன். அதில் ஒரு தகவல், புதினத்தில் படித்த‌ பஞ்சாமை பற்றியது. இன்றுவரை நடைமுறையில் இருக்கும் அந்த வாழ்வியல் எதார்த்தத்தை யாருமே நம்பவில்லை. கொலம்பஸ் தன் கடற்பயணத்தில் ஆமைகளை எடுத்துப் போய் சமைத்துச் சாப்பிட்டதாக இன்னொருவர் சொன்ன தகவலுக்கு அனைவரும் கைத்தட்டினார்கள். பெனிசிலின் கண்டுபிடித்த அலெக்சாண்டர் பிளெமிங் தீவிர சைவ உணவுக்காரராக இருந்து அசைவ உணவிற்கு மாறிய சம்பவத்தை உதாரணமாகச் சொல்லி வாதத்திற்கு வலு சேர்க்கலாம் என நினைத்தேன்; செய்யவில்லை. குஜராத், ஈழப் படுகொலைப் படங்களைப் பார்த்து விட்டு, இக்காலத்தில் இதுமாதிரி யாராவது செய்வார்களா என்று விலகிப் போகும் சாராரும் உள்ள சமூகம் இது!

1964ம் ஆண்டு வரும்போது யார் சாகப் போகிறார்களோ என பயந்து கொண்டே படித்தேன். தனுஷ்கோடியில் 1964 புயலில் தப்பிப் பிழைத்தவர்கள் சிலருடன் நேரடியாகப் பேசி இருக்கிறோம். நீச்சல் காளி என்ற முதியவர் தான் அதிக தகவல்கள் தந்தார். அவ்விபத்து நடந்த பகுதிகளை நானும் நண்பர் பிரேம்குமாரும் நடந்தே பார்த்திருக்கிறோம். அந்நிகழ்வுகளை அற்புதமாக விளக்குகிறது இப்புதினம்.

பின்னிணைப்பாக இருக்கும் வட்டார வழக்குச் சொல் அகராதியும், பெயர் மரூஉக்களும் அருமை. ஒஸ்தி என்ற வார்த்தைக்குக் கிறித்தவ மதத்தில் பொருள் இருக்கிறது! ஆனால் அகராதி போதாது. உதாரணமாக, கெபி மேற்றாசனம் போன்ற கிறித்தவ வார்த்தைகளின் பொருள் பெரும்பாலானவர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. புதினத்தில் உள்ள தேரி ஆராளி போன்ற வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியவில்லை.

எனக்கு 3 விசயங்கள் புதினத்தில் புரியவில்லை. படித்தவர்கள் யாராவது சொல்லவும். 1) பேச்சிக்கு மணிமேகலை எனப் பெயர் மாற்றம் செய்வதில் ஏதாவது உள்ளர்த்தம் இருக்கிறதா? 2) வசந்தா எதற்காக சிறைக்குப் போகிறாள்? அவனின் பிளந்திருந்த நெஞ்சில் மண்ணள்ளிப் போட்டு வெறியோடு அதே நெஞ்சில் அவள் மிதித்ததாகத் தான் புதினம் சொல்கிறது. அவள் கொன்றதுபோல் படித்ததாக ஞாபகம் இல்லை. 3) சிவகாசி கொள்ளை என்று சொல்லப்படும் வரலாற்றுச் சம்பவம் என்ன?

நான் ரசித்தவை:
பாத்திரங்கள் ‍-> 1) தொம்மந்திரை 2) காகு சாமியார் 3) முதல் பக்கத்தில் அறிமுகமாகி இரண்டாம் பக்கத்தில் செத்துப் போய் மூன்றாம் பக்கத்தில் தாயையும் எடுத்துக் கொண்டு ஒரு சிறுகவிதை போல் வந்து போகும் பரதேசி என்ற குழந்தை 4) சோடி வரிப்புலியன் சுறாக்களில் ஒன்று மட்டும் தூண்டிலில் மாட்டி கட்டுமரத்தோடு இழுத்துச் செல்லப்பட கூடவே இரவு முழுக்க நீந்திப் போகும் இன்னொரு மீன் 5) சூசையார், சிலுவை, கோத்ராப் பிள்ளை, செலஸ்டின்
உரையாடல்கள் -> நிறைய இருக்கின்றன. நான் ரசித்து சிரித்த ஒன்று இது: கண்டாரஓளி கலிஸ்டா ஒரு பொண்ணப் பெத்திருக்கா. அடடடடா... அவளுக்கு குஞ்சி மட்டுந்தாம் இல்ல‌
ப‌குதிகள் ‍-> 1) சூசையாருக்கும் சிலுவைக்கும் உள்ள உறவு 2) 1975ல் நாகப்பட்டினத்துக்குத் தென்கிழக்கே 300கிமீ தூரத்தில் கடலில் மையம் கொண்டிருந்த புயல் தென்மேற்காக நகர ஆரம்பிக்கும்போது, ஊரைக் காலி செய்துவிட்டு மேடான பகுதிகளுக்குப் போகச் சொல்லி மீன்துறை அதிகாரிகள் பரதவத் துறைகளில் ஜீப்பில் ஒலிபெருக்கியில் அறிவித்து செல்லும் போது, அரசு மீனவர்கள் உயிரை எந்த அளவிற்கு மதிக்கிறது எனப் புரிய வைக்கும் அதிகாரிகளுக்கு இடையேயான‌ பேச்சு. 3) பேருந்திற்குப் பணம் இல்லாமல் மணப்பாடு கடற்கரையில் சேகர் சுற்றித் திரியும் பகுதி. 4) காகு சாமியார் தன்னைத் தானே சவுக்கால் அடித்துக் கொள்ளும் சம்பவம் 5) புதினத்தின் கதையோடு சேராத கடைசி இரண்டு பக்கங்கள். கெழுகடல் செல்வி கரை நின்றாங்கு....

அனுபந்தம்:
‍‍‍‍----------------
1) சென்ற வருடம் நாங்கள் பார்த்த சிறந்த திரைப்படமாக நானும் என் நண்பன் ஒருவனும் தேர்ந்தெடுத்தது, நீர்ப்பறவை. சென்னைப் புத்தகக் கண்காட்சியில் இயக்குனர் சீனு ராமசாமியின் உரையைக் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. இப்புதினத்தில் நபர்களையும் இடங்களையும் என்னால் எளிதாகக் கற்பனை செய்து கொள்ள நீர்ப்பறவைதான் காரணம்.
2) இப்புதினத்தில் சுந்தரி டீச்சர், மலையாள ஆபாசத் திரைப்பட நாயகி போல சித்தரிக்கப்பட்டு இருந்ததாக திட்டிய விமர்சனம் ஒன்று படித்தேன். எனக்கு எதிர்க் கருத்து ஏதுமில்லை. ஏனென்றால், அம்மாதிரி படங்களை நான் சத்தம் வைக்காமல் பார்ப்பதால் கதை தெரியாது. ஆனால் சுந்தரி டீச்சர் என்ற பாத்திரம் நிறைவு பெறும் விதம் புதினத்தில் உள்ள பல நல்ல கதையாடல்களில் ஒன்று.

மனிதன், மனிதவுருவம் எடுக்கும் முன் குரங்காக இருந்தான் என்கிறது அறிவியல். அதற்கும் முன் கடலில் நீந்தும் பாலூட்டி விலங்காகவும் இருந்தான் என்கிறது. மயிர்கள் அற்ற உடலை ஆதரமாகவும் சொல்கிறது. கடலில் இருந்து வெளிவந்த அப்பாலூட்டி குரங்காகி மனிதனான‌து என்றால், நெய்தல் தான் நமக்கெல்லாம் ஆதித்திணை. தேசங்களின் வரைபடங்களில் விளிம்புகளில் இருக்கும் ஆதித்திணைவாசிகளான மீனவ இனமும் விளிம்பு நிலையிலேயே இருக்கிறது. அப்படியொரு நிலையிலேயே அவர்கள் நீடிப்பது பலருக்குச் சவுகரியம் என்பது நான் சொல்லித் தமிழ் பேசும் நல்லுலகிற்குச் சொல்லத் தேவையில்லை. இப்புதினம் சொல்லும் சில கருத்துக்களுடன் நான் முடிக்கிறேன்; நாம் ஆரம்பிக்க வேண்டியவைகள் நிறைய இருக்கின்றன‌ !

கடற்கரையில் நடைமுறையில் உள்ள எழுதப்படாத சட்டப்படி பணயக் கைதிகளாகப் பிடித்து வரப்படுபவர்களைக் கடலில் வைத்துத்தான் அடிக்க முடியும். அவர்களைக் கரை கொண்டுவந்து நிலத்தில் அவர்கள் கால் வைத்துவிட்டால் அடிப்பதற்கு அந்தச் சட்டம் இடம் கொடுப்பதில்லை. கரையில் இறங்கி நடந்தவுடன் அந்தப் பணயக் கைதிகள் விருந்தினராகக் கருதப்படுவர். ஊர்ச் செலவில் அவர்களுக்குப் புதுத்துணிகள் கொடுப்பார்கள். வழக்கு முடியும் வரை அவர்கள் சொந்த ஊருக்குச் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால் அவர்கள் தங்கள் ஊரில் இருப்பதாகத் தகவல் அனுப்புவார்கள்.

பரதவர்களுக்கிடையே மட்டுமல்ல; பிற சமூகத்தினருடன் மோதல்கள் வரும்போது காலங்காலமாக சில நியதிகளை உறுதியாகக் கடைப்பிடிக்கிறார்கள். எந்த அளவு உக்கிரமான சண்டையானாலும் இவர்கள் முதியவர்களையும் பெண்களையும் குழந்தைகளையும் ஒருபோதும் தொட்டதில்லை. மன்னிப்பு கேட்டுவிட்டாலும் அடைக்கலம் என்று வந்துவிட்டாலும் தொடுவதில்லை.

- ஞானசேகர்
(http://jssekar.blogspot.in/)