Tuesday, October 22, 2013

114. மழைப் பேச்சு

ஆணாதிக்கம் என்பது
காரியம் முடிந்ததும்
திரும்பிப் படுத்துக்கொள்வது.
- மகுடேசுவரன் (காமக்கடும்புனல் நூலிலிருந்து)
------------------------------------------------------------------------------------------------------------
புத்தகம் : மழைப் பேச்சு
ஆசிரிய‌ர் : அறிவுமதி
வெளியீடு : சாரல், அபிபுல்லா சாலை, தியாகராயர் நகர், சென்னை
முதற்பதிப்பு : 2011
விலை : 200 ரூபாய்
பக்கங்கள் : 112
வாங்கிய இடம் : ஞாபகமில்லை
------------------------------------------------------------------------------------------------------------
இத்தளத்தில் எனது 75வது பதிவு இது. பல கவிதைகள் படித்திருந்தாலும் இதுவரை இத்தளத்தில் எந்தவொரு நேரடித் தமிழ்க் கவிதைப் புத்தகம் பற்றியும் நான் எழுதியதில்லை என்பதைச் சமீபத்தில் தான் உணர்ந்தேன். இந்த வாரம் வீட்டிற்குச் சென்றிருந்த போது எனது புத்தகக் கிடங்கில் இருந்த கவிதைத் தொகுப்புகளைப் புரட்டிப் பார்த்து கடைசியாக கவிஞர் அறிவுமதியின் மழைப் பேச்சு தேர்ந்தெடுத்தேன். கவிஞர் அறிவுமதிக்கு அறிமுகம் தேவையில்லை. எனது தளத்தில் முகப்புப் பக்கத்திலேயே இருமுறை அவர் பெயரைக் காணலாம். நான் அதிக‌முறை வாங்கிப் படித்த / பரிசளித்த‌ பட்டியலில் அறிவுமதி அவர்களின் இரண்டு புத்தகங்களும் உண்டு; ஆணுக்கும் பெண்ணுக்குமான நட்பு சொல்லும் 'நட்புக்காலம்'; ஈழத்தமிழனின் வலி சொல்லும் 'வலி'.
(http://eraeravi.blogspot.in)
'ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்'
என்ற‌ வள்ளுவரின் மூன்றாம் பால் சொல்லும், உடல்களின் உரையாடல்களே இந்த மழைப் பேச்சு. 'காடுகள் உடுத்தி, கடல்கள் உடுத்தி, ஆறுகள் உடுத்தி, அருவிகள் உடுத்தி, இயற்கையின் முழுக் குழந்தைகளாகிக் கேட்டுப் பாருங்கள். நிலாவிலிருந்து உதிர்கிற இலைகளாய் மழைப் பேச்சு உங்களை நனைத்துக் கொண்டே இருக்கும். இது உங்கள் மழைப் பேச்சு' என்று ஆசிரியர் த‌ன்னுரையில் சொல்லும் மழைப்பேச்சுக்குக் கருங்குடையாய் இடையூறு செய்யாமல், 10% கவிதைகளை உங்கள் வாசிப்பிற்குத் தருகிறேன்.

நிகழ்கையில் சாரல்
நினைக்க நினைக்கத்தான் மழை

உள்ளே கனக்கிற நீ
மேலே மிதக்கிறாய்

நாகரிகம் என்பது
காமமற்ற தழுவல்

தண்ணீர் விற்பவர்கள்தாம்
காமத்தையும் நகைகளாக்கிக் கொண்டிருக்கிறார்கள்

இரண்டாவது சுற்றுக்கான இடைவெளியை
அழகு செய்வதில் இருக்கிறது
ஆண் பெண் உறவு

ஊறித் தளும்பும் கேணி
தும்பியின் தொடுதலில் வழிகிறது

பயன்படத்தான் செய்கிறது
தும்பி பிடித்த அனுபவம்

எல்லாக் கிளைகளிலும் ஊர்ந்து திரும்பிய‌
எறும்புக்குக் கிடைத்தது கடைசியாய்
இலை நுனியில் மழைத்துளி

மூடித் திற‌
திறந்து மூடு
இசைதரும் புல்லாங்குழல்

எல்லா மழைகளுக்கும் பிறகான‌
மூச்சுகள் ஓய்ந்த பிறகு வாய்த்தது
நீ விரும்பிச் செய்த மழை

நுனி நாக்கில் முளைக்கின்றன
பறப்பதற்கான சிறகுகள்

இது இன்பத் தமிழ். மணமக்களுக்கான மகிழ்ச்சி நூல். முறையே இப்படி முன்னட்டையும் பின்னட்டையும் சொல்கின்றன. உண்மைதான். அதற்காக‌ எனது திருமணத்திற்குப் பரிசளிக்கக் குறித்துக் கொள்ளாதீர்கள் நண்பர்களே! மூன்று வார்த்தைகளில் உள்ள‌ சில கவிதைகள் கூட‌ புரியவில்லை என்ற வருத்தத்தில் இருக்கிறேன்.

கவிதைகளுக்குப் பின்னிருக்கும், மனித உடல்களற்ற புகைப்படங்களும் கவி சொல்வதில் கொஞ்சம் நீங்களும் நனைந்து பாருங்கள்.

- ஞானசேகர்
(http://jssekar.blogspot.in/)

Friday, October 11, 2013

113. அத்தாணிக் கதைகள்

-------------------------------------------------------------------------
புத்தகம் : அத்தாணிக் கதைகள்
ஆசிரிய‌ர் : பொன்னீலன்
வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், அம்பத்தூர், சென்னை
முதற்பதிப்பு : திசம்பர் 2004
விலை : 50 ரூபாய்
பக்கங்கள் : 144
வாங்கிய இடம் : நியூ சென்சுரி புக் ஹவுஸ், சிங்காரத்தோப்பு, திருச்சி
-------------------------------------------------------------------------

புதுக்கோட்டை மாவட்டத்தின் வடகிழக்கு எல்லையில் தஞ்சை மாவட்டத்தைத் தொட்டுக் கொண்டு கிடக்கும் சின்னஞ்சிறு கிராமம். பஸ், குழாய்த் தண்ணீர், மின்சாரம், சினிமாக் கொட்டகை, தொலைக்காட்சிப் பெட்டி என்னும் பஞ்ச பூதங்களைத் தவிர, மற்றபடி கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தமிழ் வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ்க் கிராமம். விவசாயத்தையே எல்லாமுமாகக் கொண்ட மக்கள். இப்படித்தான் அத்தாணி என்ற கிராமத்தை முன்னுரையில் அறிமுகப்படுத்துகிறார் ஆசிரியர். பொன்னீலன். சாகித்ய அகாடமி விருது பெற்றவர். 1983 முதல் 1988 வரை அத்தாணியில் பணியாற்றியபோது விவசாய மக்களோடு நெருங்கிப் பழகும் வாய்ப்புக் கிடைத்து, நாட்டுப்புற கதைகளைச் சேகரிக்கும் வழக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார். அதன்பிறகு அவர் கன்னியாகுமரி பகுதியில் குடியேறிவிட்டாலும், அங்கும் அவ்வழக்கத்தைத் தொடர்ந்திருக்கிறார். அவற்றைத் தொகுத்து நூலாக வெளியிட தோன்றிய சிந்தனையின் முதல் செயல்வடிவமே இப்புத்தகம். அத்தாணிக் கதைகள். 
(http://www.noolulagam.com)
மொத்தம் 51 கதைகள். 18 கதைசொல்லிகளின் விவரங்களைப் புகைப்படங்களுடன் இணைத்திருக்கும் விதம் பாராட்டுக்குரியது. பிழைக்கத் தெரிந்தவன் என்ற கதையைச் சிறுவயதில் பாக்யா இதழில் படித்திருக்கிறேன். இரண்டு மடங்கு, எதிரும் புதிரும், எங்கே போகிறார் போன்ற கதைகள் இன்று நிறைய பேருக்குப் பரவலாகத் தெரிய வாய்ப்பிருக்கிறது. வீரப் பெண் என்ற கதையை எனது அம்மாச்சி மிகப் பெரிய சரித்திர நிகழ்வு போல, சென்ற வாரம் கூட எனக்கு இருநூறாவது முறையாகச் சொன்னாள். அந்த வீரப் பெண் கதையை எனது சிறுகதை ஒன்றில் ஒரே வரியில் நான் மேற்கோளாக‌ எழுதி இருக்கிறேன். நானும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவன் என்றாலும், மற்ற கதைகள் யாவும் எனக்கு புதியவை போலவே இருந்தன. எல்லாக் கதைகளும் நகைச்சுவை உணர்வுடனேயே எழுதப்பட்டு இருப்பதால், கண்டிப்பாக படிக்கலாம்.

நான் மிகவும் ரசித்த கதைகள்: 
1. பெண்ணுடம்பில் இயற்கையாக நடக்கும் ஒரு காரியத்தைத் தீட்டு என்று சொல்லும் பெண் சாமியான அம்மனையே ஒரு மானுடப் பெண் எதிர்க்கும் - தீட்டு
2. கணவன் கண்ணெதிரேயே கள்ளக் காதலனுடன் சரசம் செய்யும் - சாமர்த்தியசாலி
3. மற்ற நான்கு கால் விலங்குகளுக்கு எல்லாம் பின்னங்கால்களுக்கு இடையே பாதுகாப்பாகத் தொங்க, பன்றிக்கு மட்டும் பின்பாகத்தில் புடைத்துக் கொண்டிருக்கும் பிரம்மனின் படைப்பைச் சொல்லும் - அவசரம்
4. ஊரார் பார்க்க சல்லாபம் செய்ய விதிக்கப்பட்டிருக்கும் நாயினத்தின் கதை - தர்மர் சாபம்
5. முட்டாள் கணவனைச் சமாளிக்கும் புத்திசாலி பெண்ணின் கதை - பணியார மழை
6. இரண்டு பேர் சேர்ந்து செய்த தவறுக்கு ஒருத்தி மட்டும் ஏன் பிரசவ வலி தாங்க வேண்டும்? - பரமசிவன் வரம்
7. மலை நகர்ந்தது
8. சர்க்கார் முத்தம்

நான் மிகவும் ரசித்த கதைமாந்தர்: மொட்டைப் பெட்டிசன் முனியசாமி

தொடர்புடைய எங்களின் பிற பதிவு: மறைவாய் சொன்ன கதைகள்

- ஞானசேகர்
(http://jssekar.blogspot.in/)

Saturday, October 05, 2013

112. சாமிகளின் பிறப்பும் இறப்பும்

God is dead. God remains dead. And we have killed him.
- Friedrich Nietzsche
--------------------------------------------------------------------------------------------------------------------------
புத்தகம் : சாமிகளின் பிறப்பும் இறப்பும்
ஆசிரிய‌ர் : ச.தமிழ்ச்செல்வன்
வெளியீடு : பாரதி புத்தகாலயம், சென்னை
முதற்பதிப்பு : திசம்பர் 2011
விலை :  30 ரூபாய்
பக்கங்கள் : 64
வாங்கிய இடம் : New Book Lands, வடக்கு உஸ்மான் சாலை, தியாகராய நகர், சென்னை
--------------------------------------------------------------------------------------------------------------------------
பெயரிலேயே ஞானம் உடைய நான் ஞானம் அடைய‌ எனக்கும் மதம் சொல்லிக் கொடுத்தார்கள். ஆதாம் ஏவாள் தான் உலகின் முதல் ஆண் பெண். காயீன் ஆபேல் என்று இரண்டு மகன்கள். Both are boys. நில அபகரிப்புப் பிரச்சனையில் ஆபேலைக் காயீன் கொன்றுவிட‌, அதன் பிறகு... எனக்கொரு சந்தேகம். அதன் பிறகு அடுத்த தலைமுறை எப்படி உண்டாயிற்று? போர்த்துக்கீசிய மாலுமிகளுக்குக் காட்சி தந்த மேலைநாட்டு மாதாவிற்கு வேளாங்கண்ணி சேலை எப்படி கிடைத்தது? பூமியைக் கவர்ந்து போய் ஓர் அரக்கன் கடலுக்கு அடியில் ஒளித்து வைக்க, மீன் அவதாரம் எடுத்து சாமி பூமியைக் காக்கிறார். பூமிமேல் இருக்கும் கடலுக்குள்ளே பூமியை எப்படி ஒளித்து வைப்பது? 'கடவுளர் கதைகள்' என்றொரு சின்னப் புத்தகம். சாமி என்ற பெயரில் பெரியார் எழுதிய புத்தகம் என நினைக்கிறேன். கடவுளர்களின் புராணக் கதைகள் குறித்து எழும்பும் கேள்விகள்தான் அப்புத்தகம். குப்புறப் படுத்துத்தான் படிக்க வேண்டும். அவ்வளவும் கிளுகிளுப்பான கதைகள். மதமுடைய சாமிகள் எல்லாம் பணமுடைய சாமிகள் என்பதால், மதமற்ற ஏழைச்சாமிகள் பற்றி கொஞ்சம் படித்தறியலாம்.
(http://discoverybookpalace.com)
எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன். பேசாத பேச்செல்லாம், தமிழ்ச்செல்வன் சிறுகதைகள் போன்ற ஆசிரியரின் பிற புத்தகங்களை ஏற்கனவே படித்திருக்கிறேன்.  'சாமிகளின் பிறப்பும் இறப்பும்'. நாட்டுப்புற ஏழைத் தெய்வங்கள் மூலம் கடவுள் என்ற சித்தாந்தத்தைக் கேள்வி கேட்கும் 16 கட்டுரைகளின் தொகுப்பே இப்புத்தகம். தமிழ்நாட்டில் முன்னர் கொற்றவை என்றொரு பெண்சாமி இருந்திருக்கிறது. ஊரெல்லாம் கோயில்கள் இருந்திருக்கின்றன. இப்போது அவளை யாரும் கும்பிடுவதில்லை. கோயில்களில் சரஸ்வதி இல்லை. சிவகாசியில் அச்சாகி வரும் படங்களில் மட்டுமே சரஸ்வதி வாழ்கிறாள். மூதேவி என்ற சாமியை வண்ணார் சமூகத்தைத் தவிர வேறு யாரும் வணங்குவதில்லை. இப்படி சாமிகளுக்கும் கூட‌ பிறப்பும் இறப்பும் இருப்பதையும், சாமிகளில் கூட சாதி இருப்பதையும் அறிமுகமாகச் சொல்லிவிட்டு, ஐகோர்ட் ராஜா - கவர்னர் பாடிகாட் போன்ற சில வித்தியாசமான சாமி பெயர்களைச் சொல்லிவிட்டு, ஏழைச்சாமிகளைப் பற்றி பேசுகின்றன அடுத்தடுத்த கட்டுரைகள். ஏழைச்சாமிகள் எல்லாம் கற்பனைக‌ள் அல்ல; மனித அவதாரம் எடுத்த கடவுளர்கள் அல்ல; கொஞ்சம் காலத்திற்கு முன் நம்மோடு வாழ்ந்த சக மனிதர்கள்.

அருந்ததிய சாதியில் பிறந்து அரசன் மகள் பொம்மியைக் காதலித்ததால், அன்று இரயில் தண்டவாளம் போன்ற‌ வசதிகள் இல்லாததால், கொலையா தற்கொலையா என்ற சந்தேகத்திற்கு இடமில்லாமல் வெளிப்படையாகவே கொல்லப்பட்ட‌ மதுரை வீரன் சாமியைப் பற்றிப் பேசுகிறது ஒரு கட்டுரை. ஒரு தாழ்த்தப்பட்டவனைச் சாமியாக்கி ஆதிக்க வர்க்கத்திற்கு எதிர்ப்பு காட்டிய எளிய மக்களின் கதை அது. அதே போல் தாழ்த்தப்பட்ட காதலனை ஆதிக்க வெறியர்களுக்குப் பலி கொடுத்து, முத்தாலம்மன் என்ற பெயரில் கம்பம் பகுதியில் வணங்கப்படும் சாமியைப் பற்றி சொல்கிறது ஒரு கட்டுரை. தனக்காக உயிர்விட்ட கணவனின் சிதையில் வீழ்ந்து மாய்த்துக் கொண்ட மாலையம்மன் மற்றும் மலட்டம்மன், ஒரு பழிச்சொல்லால் செங்கல் சூளைக்குள் மாய்த்துக் கொண்ட சீலைக்காரி என பரிதவித்துச் செத்த சக மனிதர்களைச் சாமியாக்கி, பரிகாரம் என்று மந்திரம் ஓதி யாகங்கள் செய்ய வசதி இல்லாத எளிய மக்களின் கதைகள்.

திருமணம் ஆகாத இளம்பெண் ஒரு குடும்பத்தில் இறந்து போனால் சாமியாக்கி வழிபடும் வழக்கம் பொதுவாக உண்டு. எங்கள் வீட்டில் கூட, நான் பார்த்திராத அத்தை ஒருத்தியின் நினைவு நாளில் வருடாவருடம் சாமி கும்பிடும் வழக்கம் உண்டு. இப்படி குடும்பசாமி குலசாமிகள் பற்றி ஒரு கட்டுரை. ஒரு நாட்டுப்புறச் சாமியைக் கும்பிடும் மக்கள் வேறு ஊருக்கு நிரந்தரமாகக் குடி போகையில் கைப்பிடி மண்ணெடுத்துப் போய் புது ஊரில் அதே சாமியைப் புதிதாகக் கட்டும் பிடிமண் சாமிகள், மின்னல்வெட்டி செத்துப் போன இடத்தில் கல்நட்டு சாமியாக்கி விட்டு கும்பிடாமலேயே விடப்படும் 'கும்பிடாத சாமி'கள் பற்றியும் ஆசிரியர் குறிப்பிடத் தவறவில்லை. ஒருநாள் முதல்வர் போல் ஒருநாள் சாமி, மனிதரிடம் அடிவாங்கும் சாமி, ஐஸ் வாங்க ஊர்விட்டு ஊர் போன ஐஸ் காளியம்மன், திருவில்லிப்புத்தூர் பகுதியில் கையில் பிடித்த குடையுடனேயே இறந்து போனதால் கொடைகாத்தான் சாமி என சில வித்தியாசமான சாமிகளையும் சொல்கிறார் ஆசிரியர். பெரியார் சொன்னது போல், மதத்தையும் தூக்கிச் சாப்பிட்டு விடும் சாதியின் சாட்சியாக இருக்கும் நெல்லை மாவட்டம் வடக்கன்குளம் 'டவுசர் சர்ச்' பற்றிய கட்டுரையை மிகவும் ரசித்தேன்.

தஞ்சை பெரிய ஆஸ்பத்திரிக்குள் இருக்கும் இஸ்மாயில் ஷா பள்ளிவாசல் போன்ற மத நல்லிணக்கம் சொல்லும் இடம் ஒன்று, எனக்கு மிக அருகில் இருந்தும் நான் கேள்விப்படாதது ஆச்சரியமே. அந்த தர்காவில் இஸ்லாமிய பக்கீர் ஒருவருக்கு அசைவமும், அவரால் காப்பாற்றப்பட்ட பிராமணப் பெண்ணுக்குச் சைவமும் படைத்து வழிபடுவார்களாம்! கண்டிப்பாக பார்க்க வேண்டும். இது என் மதம், அது உன் மதம், உன் சாமி பேரை நான் வைக்க மாட்டேன் என்று வம்பு பண்ணாமல் சில‌ ஏழைச் சாமிகள் பெயரை மத வித்தியாசம் இல்லாமல் எல்லாரும் வைத்துக் கொள்வதைச் சுட்டிக் காட்டுகிறார் ஆசிரியர். உமறுத்தேவர், உமறுக்கோனார், நாகூர்கனி நாடார், நாகூர்கனித் தேவர், பெரிய ரொண்டோ, சிறிய ரொண்டோ போன்ற பெயர்களைச் சில உதாரணங்களாகவும் மேற்கோள் காட்டுகிறார். எளிய மனிதர்களுக்கு மதவாதம் இல்லை!

சாமிகளை எப்படிப்பட்ட சூழ்நிலைகளில் மனிதன் படைத்துக் கொண்டான் என்று கற்பனைக் கதை சொல்கின்றன இரு கட்டுரைகள். ஆரம்பகால மதங்களில் இரத்தப் பலி கொடுப்பதும், அதையும் மலையுச்சியில் கொடுப்பதற்குமான காரணங்களாக ஆசிரியர் சொல்பவை அருமை. பணக்கார மற்றும் ஏழைச் சாமிகளுக்கு இடையே உள்ள 7 வேறுபாடுகளைப் பட்டியலிடுகிறது ஒரு கட்டுரை. மதம் + மடம் + நூல் உண்டு - கிடையாது. பணக்காரச் சாமிகள் மக்களின் சாதாரணச் சாப்பாட்டைச் சாப்பிடுவதில்லை. சர்ச் / மசூதியில் ஆடு வெட்ட முடியாது - தர்காவில் வெட்டலாம். மதச்சாமிகளைக் கும்பிட இடையில் புரோகிதர் / பாதிரியார் / முல்லா தேவை. ஏழைச் சாமிகளுக்குப் பூசை நாளில் அந்த நேரத்திற்கு மட்டும் அய்யர் அல்லாத பூசாரி இருப்பார். ஏழைச்சாமிகள் அடிக்கடி மனித உடலில் இறங்கி வந்து சாமியாட்டம் ஆடுவதுண்டு. ஏழைச்சாமிகளுக்குக் கற்சிலைகள் கிடையாது. ஏழைச்சாமிகளை வணங்கும் ஏழை மக்கள், பணக்காரச் சாமிகளையும் வணங்குவதுண்டு. ஆனால் பணக்காரச் சாமியை வழிபடுபவர்கள் எவரும் சுடலைமாட அய்யங்கார், காளியப்ப அய்யர், முனியப்ப ஆச்சாரியார் என்று பெயர் வைப்பதில்லை. ஒரு காலத்தில் ஏழையாய் இருந்து திடீர் பணக்காரர் ஆகிவிடும் ஆதிபராசக்தி போன்ற சாமிகளும் சரித்திரத்தில் உண்டு.

இப்படி மனிதனே கடவுளையும் படைத்துவிட்டு அதற்குப் பயப்படுபவனாகவும் மாறிப் போய், கருணை வடிவமாகவும், இதயமில்லா இவ்வுலகில் இதயமாகவும் கற்பனை செய்து கொண்டு வாழும் மனித சமூகத்தைப் பற்றி பேசும் கட்டுரைகளை 'கடவுள் இல்லை; இல்லவே இல்லை; கடவுளை நம்புபவன் முட்டாள்; கடவுளை நம்பச்சொல்பவன் அயோக்கியன்' என  பெரியாரின் வார்த்தைகளுடன் முடிக்கிறார் ஆசிரியர். கண்டிப்பாக படித்து சிந்திக்க வேண்டிய புத்தகம்.

தொடர்புடைய எங்களின் பிற பதிவுகள்:
1. தம்பியின் குறுஞ்சாமிகளின் கதைகள்
2. அண்ணனின் ஆதிசேசன் படுக்கை
3. அண்ணனின் துருத்தி

'கடவுள் அல்லது கடவுள்கள் படைப்புகளில் சிறந்தது எது?
மனிதன்
யார் சொன்னது?
மனிதன்'
என்றார் ஓர் அறிஞர்.
'மனிதன் அல்லது மனிதர்கள் படைப்புகளில் சிறந்தது எது?
கடவுள்
யார் சொன்னது?
கடவுள்'
என முடிக்கிறேன் நான்.

அனுபந்தம்:
----------------
புத்தகத்திற்கு அப்பால்,

1. எனக்குப் பிடித்த ஏழைச்சாமி, வனத்துச் சின்னப்பர். விவசாய கத்தோலிக்கக் கிறித்தவர்களின் சாமி. பூச்சிப் பட்டைகளில் இருந்து காப்பவர் என்ற நம்பிக்கை. ஆடிமாத புதன் கிழமைகளில் விவசாய நிலங்களில் கோழி வெட்டிச் சமைத்துச் சாப்பிடுவார்கள். வருமானம் வராத சாமி என்பதால், எனக்குத் தெரிந்த வரையில் இன்னும் எந்தப் பாதிரியாரும் இவரை மதத்தில் சேர்க்கவில்லை. இப்போது அவருக்கு வெள்ளைத்தோல் உருவம் கொடுத்து கண்ணாடி போட்டு கடைகளில் விற்கிறார்கள். வீட்டிலேயே சமைக்கிறார்கள். இச்சாமியைத் திரும்பவும் விவசாய நிலங்களுக்குக் கொண்டு போய் காப்பாற்ற வேண்டும்.

2. ஒரிசாவில் பூரி ஜெகன்நாதர் என்ற பணக்கார சாமி இருக்கிறது. இருமுறை அங்கு சென்றிருக்கிறேன். கோயிலுக்குள் சென்றதில்லை. தேர் மிகப் பிரபலம். மூன்று உருவங்களாகக் காட்சியளிக்கும் அச்சாமிகளுக்கு, 'நான் கடவுள்' திரைப்படத்து மாங்காட்டுச் சாமி மாதிரி கைகால்கள் கிடையாது. ஏன் அப்படி என்று தேடிக் கதை படியுங்கள். தலையும் முண்டமும் சேர்த்து ஒரே உடலாய் இருக்கும் சாமிகளைக் கும்பிடும் மரபு பற்றியும் தேடிப் படியுங்கள்.

- ஞானசேகர்
 (http://jssekar.blogspot.in/)

Wednesday, October 02, 2013

111. வருத்தப்பட்டு பாரம் சுமக்கின்றவர்களே எங்களிடம் வராதீர்கள்

(கர்மவீரருக்கும் மகாத்மாவிற்கும் சமர்ப்பணம்)

பெரும்பாலான கல்லூரிகள் தனியார் அமைப்பால் நடத்தப்படுவதும், அமைப்பு ரீதியாகவும், அலுவலர் ரீதியாகவும் இவ்வமைப்புகள் வகுப்புவாதத் தன்மை கொண்டுள்ளன. இது மாணவர் சேர்க்கையிலும் பிரதிபலிக்கிறது. இதனால் உயர் வகுப்பினர் சேர்க்கையில் முன்னுரிமை பெறுகின்றனர். தீண்டத்தகாத வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்குச் சேர்க்கை முடிந்து விட்டதாகக் கூறி இடம் மறுக்கப்படுகிறது.
- டாக்டர் அம்பேத்கர் (காலத்தில் இருந்து இன்றும்...)
--------------------------------------------------------------------------------------------------------------------------
புத்தகம் : வருத்தப்பட்டு பாரம் சுமக்கின்றவர்களே எங்களிடம் வராதீர்கள்
ஆசிரிய‌ர் : அய்.இளங்கோவன் (ஆங்கிலத் துறைத் தலைவர், எலிசபத் ராட்மன் ஊரிஸ் கல்லூரி, வேலூர்)
வெளியீடு : கருப்புப் பிரதிகள், லாய்ட்ஸ் சாலை, சென்னை
முதற்பதிப்பு : சூன் 2009
விலை :  40 ரூபாய்
பக்கங்கள் : 72
வாங்கிய இடம் : New Book Lands, வடக்கு உஸ்மான் சாலை, தியாகராய நகர், சென்னை
--------------------------------------------------------------------------------------------------------------------------
இந்திய வரலாற்றின் பக்கங்களைப் புரட்டினால் காலந்தோறும் சில குறிப்பிட்ட சமூகங்கள் தீண்டத்தகாதவர்களாக கல்வி மறுக்கப்பட்ட கொடுமைகளைக் காணலாம். போனால் போகட்டும் என்று தர்ம சிந்தனையிலும் புண்ணிய நோக்கிலும் ஆரம்ப காலத்தில் கொஞ்சம் கல்வி கொடுத்திருக்கிறார்கள். 'தீண்டத்தகாதவர்களுக்குக் கல்வி அளிக்கலாம். ஆனால் அதில் நடைமுறைச் சிக்கல்கள் ஏற்படுமானால் அதற்கு முக்கியத்துவம் தரத் தேவையில்லை' என்றார்கள் ஆங்கிலேயர்கள். 1930ல் கல்லூரியில் படித்த மெட்ராஸ் மாகாண தாழ்த்தப்பட்டவர்கள் 47 பேர் மட்டுமே. அவையும் தொழில்நுட்ப மற்றும் அறிவியல் படிப்புகளாக இருந்திருக்க வாய்ப்பில்லை.

கேரளாவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உலகின் முதல் இடதுசாரி அரசு, 'கேரளக் கல்விச் சட்டம் 1957' என்ற பெயரில் ஒரு சட்ட முன்வரைவைக் கொண‌ர்ந்தது. அது சிறுபான்மைக் கல்வி நிறுவனங்களில் தாழ்த்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்க வகை செய்தது. கேரள சிறுபான்மை மக்கள் எதிர்த்தனர். இதனால் சட்டப் பேரவையில் நிறைவேறிய சட்ட முன்வரைவு ஆளுநரின் ஓப்புதலின்றி குடியரசுத் தலைவரின் கருத்துக்கு அனுப்பப்பட்டது. 'இச்சட்டம் சிறுபான்மையினரின் உரிமைகளுக்கு எதிரானதல்ல. சிறுபான்மையினரின் கல்வி நிறுவனங்களில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு இப்பிரிவின் கீழ் செல்லத்தக்கதே' என்றது உச்ச நீதி மன்றம். இத்தனை ஆண்டுகள் கடந்துவிட்டோம். மைய மாநில அரசுகள் ஏதாவது செய்தனவா? அத்தீர்ப்பின் நடைமுறை எதார்த்தம் என்ன? இப்புத்தகம் பதில் சொல்கிறது.
(http://udumalai.com)
அரசுக் கல்லூரிகளில் உள்ள மொத்த பணியிடங்களை விட அரசு உதவி பெறும் தனியார் கல்லூரிகளில் இரண்டு மடங்கு அதிகம். பொதுநலம் எனக் காரணம் காட்டி, மக்கள் வரிப்பணத்தில் இருந்துதான் மானியம் என்ற பெயரில் அரசிடம் இருந்து இக்கல்லூரிகள், ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாதோருக்கான ஊதியத்தை 100% பெறுகின்றன. பெரும்பான்மையான வேலை மற்றும் கல்வி வாய்ப்புகளைத் தம்வசம் வைத்திருக்கும் இக்கல்லூரிகள் சமூக நீதிப்படி நடந்துகொள்கின்றனவா? அரசமைப்புச் சட்டம் இட ஒதுக்கீட்டில் இருந்து சிறுபான்மைக் கல்வி நிறுவனங்களுக்கு விலக்கு அளிக்கிறது. சிறுபான்மை மதங்கள் தத்தம் மதங்களில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு உள்ளிட்ட நெடு நாளைய கோரிக்கைகளை அலட்சியப்படுத்தி வரும் அரசை அடிக்கடி கண்டிக்கின்றன. ஆனால் அவர்கள் நடத்தும் கல்வி நிறுவனங்களில் தாழ்த்தப்பட்டோருக்கு உரிய இட ஒதுக்கீட்டை அளிக்கின்றனவா? சிறுபான்மையினரின் கல்லூரிகளில் சிறுபான்மையினருக்கு மட்டுமே வேலை என்பது மதச் சார்பின்மைக்கும் அரசமைப்புச் சட்டத்திற்கும் எதிரானதில்லையா? 2000 முதல் 2008 வரையிலான புள்ளி விவரங்களை இப்புத்தகம் ஆதரமாகச் சொன்னாலும், அதன்பிறகு பெரிய மறும‌லர்ச்சி ஏதும் நம் நாட்டில் நடக்காத‌தாலும், அவ்வாதாரங்கள் இன்றும் கிட்டத்தட்ட பொருந்தும் எனக் கொள்ளலாம். பின்வரும் முப்பெரும் ஓரவஞ்சனைகளைச் சுட்டிக் காட்டுகிறது இப்புத்தகம்.
1. சிறுபான்மைக் கல்லூரிகளில் முழுமையாக நிரப்பப்படாமல் மறுக்கப்படும் தாழ்த்தப்பட்டோருக்கான வேலை வாய்ப்பு.
2. அரசு உதவி பெறும் தனியார் கல்லூரிகளில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு மறுக்கப்படும் இட ஒதுக்கீடு.
3. இக்கல்லூரிகளில் தாழ்த்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினருக்கு மறுக்கப்படும் கல்வி.

தமிழகத்தில் அரசு உதவி பெறும் கல்லூரிகள் 160. இதில் மத மற்றும் மொழி சிறுபான்மையினரால் 62 கல்லூரிகள் நடத்தப்படுகின்றன. சிறுபான்மைக் கல்லூரிகள் இட ஒதுக்கீட்டின் படி 751 தாழ்த்தப்பட்ட, 49 பழங்குடியின விரிவுரையாளர்கள் பணிபுரிய வேண்டும். ஆனால் 160ல் 14ல் மட்டுமே 61 தாழ்த்தப்பட்ட விரிவுரையாளர்கள் பணியில் உள்ளனர். மொத்தமுள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத 15192 பணியிடங்களில் 82 பேர் இயலாதோர், 67 பேர் ஆதரவற்ற கைம்பெண்கள், பழங்குடியினர் ஒரே ஒருவர் மட்டுமே. அதுவும் கூட, வள்ளி என்ற பழங்குடியினப் பெண்ணைக் கட்டிய முருகனின் பழனியில், அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கல்லூரியில் பெருக்கும் பணியில் இருப்பவர்.

அரசு உதவி பெறும் சிறுபான்மைக் கல்லூரிகள் இப்படி என்றால், அரசு உதவி பெறும் சிறுபான்மை அல்லாத கல்லூரிகளில் 1124 தாழ்த்தப்பட்ட, 62 பழங்குடியின விரிவுரையாளர்கள் இருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட விரிவுரையாளர்கள் 49.5% இருக்கின்றனர்; மீதமுள்ள இடங்கள் மற்றவர்களால் நிரப்பப்பட்டுள்ளன. பழங்குடியினர் யாரும் இக்கல்லூரிகளில் விரிவுரையாளர்களாக இல்லை. இட ஒதுக்கீட்டை முழுமையாகப் பயன்படுத்தும் பாராட்டத் தகுந்த மூன்று கல்லூரிகளை ஆசிரியர் அடையாளம் காட்டுகிறார்.
1. திருச்சி உருமு தனலட்சுமி கல்லூரி
2. பரமத்தி வேலூர் கந்தசாமி கண்டர் கல்லூரி
3. சென்னை எஸ்.அய்.வி.இ.டி. கல்லூரி

160 கல்லூரிகளில் உள்ள ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் 5326. இட ஒதுக்கீட்டின் படி தாழ்த்தப்பட்டவர்கள் பழங்குடியினர் முறையே சிறுபான்மைக் கல்லூரிகளில் 187 - 14 எனவும், சிறுபான்மை அல்லாத கல்லூரிகளில் 236 - 32 எனவும் நிரப்பப்பட்டிருக்க வேண்டும். ஆனால் பிற சாதியினரைக் கொண்டே இப்பணியிடங்கள் நிரப்பப்பட்டிருக்கின்றன. அதாவது எழுத்தர் மேலாளர் காசாளர் என்ற நிதி மற்றும் நிர்வாகம் சம்மந்தப்பட்ட பணியிடங்களில் தாழ்த்தப்பட்டவர்களும் பழங்குடியினரும் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டு, துப்புரவுப் பணியாளர்களாகவும் அலுவலக உதவியாளர்களாகவும் அமர்த்தப்படும் வர்ணாசிரம தர்மத்தின் நவீனவடிவம். அரசு உதவி பெறும் 160 தனியார் கல்லூரிகளில் இன்றைக்கும் கூட ஒரு கல்லூரியிலும் ஒரு தாழ்த்தப்பட்டவர் முதல்வராக இல்லை.
(http://www.keetru.com)
சிறுபான்மையினரின் கல்வி நிறுவனங்கள் சிறுபான்மையினரின் நலனுக்காக ஏற்படுத்தப்பட்டவை என்றால், அங்கும் சிறுபான்மையல்லாத சாதி இந்து மாணவர்களே அதிகம். பின், அரசு மற்றும் தனியார்க் கல்லூரிகள் செய்யும் அதே வேலையைச் செய்ய சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் என்ற தனி அமைப்பு எதற்கு? பணம் சம்பாதிக்கவும், அதிகாரம் செய்யவும் தானோ? அரசு உதவி பெறும் கல்லூரிகளின் பெயர்கள், பெறும் மானியம், அங்கு நிரப்பப்பட்டிருக்கும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின பணியிடங்களின் எண்ணிக்கை, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களின் எண்ணிக்கை என ஆங்காங்கே அட்டவணைகளுடன் ஆதாரங்கள் தரும் இப்புத்தகம், காசு கொடுத்தால் கதவு திறக்கும் வணிகமாகிப் போன நம் கல்வி நிறுவனங்களின் முகத்திரை காட்டும் கண்ணாடி! இது போல் பள்ளிக் கூடங்களுக்கு ஒரு புத்தகம் வந்தால் இன்னும் நலமாய் இருக்கும்!

நன்கு படித்த ஓர் அம்பேத்காரால் 6 கோடி தாழ்த்தப்பட்டவர்கள் பயன்பெற்றனர். இன்னும் 25 கோடி பேர் அதன் பயனை அறுவடை செய்து கொண்டிருக்கின்றனர். இன்று படித்த தாழ்த்தப்பட்டவர்கள் பலகோடி பேர் இருந்தும் அதனால் எந்தப் பலனும் வந்துவிடவில்லை, பாமரனுக்கு! திருவிவிலியத்தில் இயேசு கிறித்து ஒரு கதை சொல்கிறார். ஓர் ஏழை பணக்காரனின் வீட்டு வாசலில் காத்திருந்து செத்துப் போகிறான். பணக்காரனும் சாகிறான். ஏழை சொர்க்கத்திற்கும் பணக்காரன் நரகத்திற்கும் போகிறார்கள். சொர்க்கத்தில் இருக்கும் ஏழையிடம் உதவி கேட்டு கதறுகிறான் பணக்காரன். உலகத்தில் இருக்கும்வரை எங்களிடம் கெஞ்சிக் கொண்டே இருங்கள்; எல்லாவற்றையும் மேலே போய் கணக்குப் பார்த்துக் கொள்ளலாம் என்கிறார்கள் பணக்காரர்கள். அவர்களுக்குத் தெரியும் அக்கதை வெறுங்கதைதான் என்று. தாழ்த்தப்பட்டவர்களாகவும் பழங்குடியினராகவும் ஒதுக்கப்படும் ஏழைகளுக்குத் தான் அது இன்னும் புரியவில்லை. அக்கதைப்படி அவர்கள் இறுதித்தீர்ப்புக்காகக் காத்திருக்கிறார்கள். இறுதித்தீர்ப்பு என்று ஒன்று உண்டெனில், காலங்கடந்து வரும் அதுவும் ஒரு மறுக்கப்பட்ட நீதியே!

- ஞானசேகர்
 (http://jssekar.blogspot.in/)