Saturday, October 05, 2013

112. சாமிகளின் பிறப்பும் இறப்பும்

God is dead. God remains dead. And we have killed him.
- Friedrich Nietzsche
--------------------------------------------------------------------------------------------------------------------------
புத்தகம் : சாமிகளின் பிறப்பும் இறப்பும்
ஆசிரிய‌ர் : ச.தமிழ்ச்செல்வன்
வெளியீடு : பாரதி புத்தகாலயம், சென்னை
முதற்பதிப்பு : திசம்பர் 2011
விலை :  30 ரூபாய்
பக்கங்கள் : 64
வாங்கிய இடம் : New Book Lands, வடக்கு உஸ்மான் சாலை, தியாகராய நகர், சென்னை
--------------------------------------------------------------------------------------------------------------------------
பெயரிலேயே ஞானம் உடைய நான் ஞானம் அடைய‌ எனக்கும் மதம் சொல்லிக் கொடுத்தார்கள். ஆதாம் ஏவாள் தான் உலகின் முதல் ஆண் பெண். காயீன் ஆபேல் என்று இரண்டு மகன்கள். Both are boys. நில அபகரிப்புப் பிரச்சனையில் ஆபேலைக் காயீன் கொன்றுவிட‌, அதன் பிறகு... எனக்கொரு சந்தேகம். அதன் பிறகு அடுத்த தலைமுறை எப்படி உண்டாயிற்று? போர்த்துக்கீசிய மாலுமிகளுக்குக் காட்சி தந்த மேலைநாட்டு மாதாவிற்கு வேளாங்கண்ணி சேலை எப்படி கிடைத்தது? பூமியைக் கவர்ந்து போய் ஓர் அரக்கன் கடலுக்கு அடியில் ஒளித்து வைக்க, மீன் அவதாரம் எடுத்து சாமி பூமியைக் காக்கிறார். பூமிமேல் இருக்கும் கடலுக்குள்ளே பூமியை எப்படி ஒளித்து வைப்பது? 'கடவுளர் கதைகள்' என்றொரு சின்னப் புத்தகம். சாமி என்ற பெயரில் பெரியார் எழுதிய புத்தகம் என நினைக்கிறேன். கடவுளர்களின் புராணக் கதைகள் குறித்து எழும்பும் கேள்விகள்தான் அப்புத்தகம். குப்புறப் படுத்துத்தான் படிக்க வேண்டும். அவ்வளவும் கிளுகிளுப்பான கதைகள். மதமுடைய சாமிகள் எல்லாம் பணமுடைய சாமிகள் என்பதால், மதமற்ற ஏழைச்சாமிகள் பற்றி கொஞ்சம் படித்தறியலாம்.
(http://discoverybookpalace.com)
எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன். பேசாத பேச்செல்லாம், தமிழ்ச்செல்வன் சிறுகதைகள் போன்ற ஆசிரியரின் பிற புத்தகங்களை ஏற்கனவே படித்திருக்கிறேன்.  'சாமிகளின் பிறப்பும் இறப்பும்'. நாட்டுப்புற ஏழைத் தெய்வங்கள் மூலம் கடவுள் என்ற சித்தாந்தத்தைக் கேள்வி கேட்கும் 16 கட்டுரைகளின் தொகுப்பே இப்புத்தகம். தமிழ்நாட்டில் முன்னர் கொற்றவை என்றொரு பெண்சாமி இருந்திருக்கிறது. ஊரெல்லாம் கோயில்கள் இருந்திருக்கின்றன. இப்போது அவளை யாரும் கும்பிடுவதில்லை. கோயில்களில் சரஸ்வதி இல்லை. சிவகாசியில் அச்சாகி வரும் படங்களில் மட்டுமே சரஸ்வதி வாழ்கிறாள். மூதேவி என்ற சாமியை வண்ணார் சமூகத்தைத் தவிர வேறு யாரும் வணங்குவதில்லை. இப்படி சாமிகளுக்கும் கூட‌ பிறப்பும் இறப்பும் இருப்பதையும், சாமிகளில் கூட சாதி இருப்பதையும் அறிமுகமாகச் சொல்லிவிட்டு, ஐகோர்ட் ராஜா - கவர்னர் பாடிகாட் போன்ற சில வித்தியாசமான சாமி பெயர்களைச் சொல்லிவிட்டு, ஏழைச்சாமிகளைப் பற்றி பேசுகின்றன அடுத்தடுத்த கட்டுரைகள். ஏழைச்சாமிகள் எல்லாம் கற்பனைக‌ள் அல்ல; மனித அவதாரம் எடுத்த கடவுளர்கள் அல்ல; கொஞ்சம் காலத்திற்கு முன் நம்மோடு வாழ்ந்த சக மனிதர்கள்.

அருந்ததிய சாதியில் பிறந்து அரசன் மகள் பொம்மியைக் காதலித்ததால், அன்று இரயில் தண்டவாளம் போன்ற‌ வசதிகள் இல்லாததால், கொலையா தற்கொலையா என்ற சந்தேகத்திற்கு இடமில்லாமல் வெளிப்படையாகவே கொல்லப்பட்ட‌ மதுரை வீரன் சாமியைப் பற்றிப் பேசுகிறது ஒரு கட்டுரை. ஒரு தாழ்த்தப்பட்டவனைச் சாமியாக்கி ஆதிக்க வர்க்கத்திற்கு எதிர்ப்பு காட்டிய எளிய மக்களின் கதை அது. அதே போல் தாழ்த்தப்பட்ட காதலனை ஆதிக்க வெறியர்களுக்குப் பலி கொடுத்து, முத்தாலம்மன் என்ற பெயரில் கம்பம் பகுதியில் வணங்கப்படும் சாமியைப் பற்றி சொல்கிறது ஒரு கட்டுரை. தனக்காக உயிர்விட்ட கணவனின் சிதையில் வீழ்ந்து மாய்த்துக் கொண்ட மாலையம்மன் மற்றும் மலட்டம்மன், ஒரு பழிச்சொல்லால் செங்கல் சூளைக்குள் மாய்த்துக் கொண்ட சீலைக்காரி என பரிதவித்துச் செத்த சக மனிதர்களைச் சாமியாக்கி, பரிகாரம் என்று மந்திரம் ஓதி யாகங்கள் செய்ய வசதி இல்லாத எளிய மக்களின் கதைகள்.

திருமணம் ஆகாத இளம்பெண் ஒரு குடும்பத்தில் இறந்து போனால் சாமியாக்கி வழிபடும் வழக்கம் பொதுவாக உண்டு. எங்கள் வீட்டில் கூட, நான் பார்த்திராத அத்தை ஒருத்தியின் நினைவு நாளில் வருடாவருடம் சாமி கும்பிடும் வழக்கம் உண்டு. இப்படி குடும்பசாமி குலசாமிகள் பற்றி ஒரு கட்டுரை. ஒரு நாட்டுப்புறச் சாமியைக் கும்பிடும் மக்கள் வேறு ஊருக்கு நிரந்தரமாகக் குடி போகையில் கைப்பிடி மண்ணெடுத்துப் போய் புது ஊரில் அதே சாமியைப் புதிதாகக் கட்டும் பிடிமண் சாமிகள், மின்னல்வெட்டி செத்துப் போன இடத்தில் கல்நட்டு சாமியாக்கி விட்டு கும்பிடாமலேயே விடப்படும் 'கும்பிடாத சாமி'கள் பற்றியும் ஆசிரியர் குறிப்பிடத் தவறவில்லை. ஒருநாள் முதல்வர் போல் ஒருநாள் சாமி, மனிதரிடம் அடிவாங்கும் சாமி, ஐஸ் வாங்க ஊர்விட்டு ஊர் போன ஐஸ் காளியம்மன், திருவில்லிப்புத்தூர் பகுதியில் கையில் பிடித்த குடையுடனேயே இறந்து போனதால் கொடைகாத்தான் சாமி என சில வித்தியாசமான சாமிகளையும் சொல்கிறார் ஆசிரியர். பெரியார் சொன்னது போல், மதத்தையும் தூக்கிச் சாப்பிட்டு விடும் சாதியின் சாட்சியாக இருக்கும் நெல்லை மாவட்டம் வடக்கன்குளம் 'டவுசர் சர்ச்' பற்றிய கட்டுரையை மிகவும் ரசித்தேன்.

தஞ்சை பெரிய ஆஸ்பத்திரிக்குள் இருக்கும் இஸ்மாயில் ஷா பள்ளிவாசல் போன்ற மத நல்லிணக்கம் சொல்லும் இடம் ஒன்று, எனக்கு மிக அருகில் இருந்தும் நான் கேள்விப்படாதது ஆச்சரியமே. அந்த தர்காவில் இஸ்லாமிய பக்கீர் ஒருவருக்கு அசைவமும், அவரால் காப்பாற்றப்பட்ட பிராமணப் பெண்ணுக்குச் சைவமும் படைத்து வழிபடுவார்களாம்! கண்டிப்பாக பார்க்க வேண்டும். இது என் மதம், அது உன் மதம், உன் சாமி பேரை நான் வைக்க மாட்டேன் என்று வம்பு பண்ணாமல் சில‌ ஏழைச் சாமிகள் பெயரை மத வித்தியாசம் இல்லாமல் எல்லாரும் வைத்துக் கொள்வதைச் சுட்டிக் காட்டுகிறார் ஆசிரியர். உமறுத்தேவர், உமறுக்கோனார், நாகூர்கனி நாடார், நாகூர்கனித் தேவர், பெரிய ரொண்டோ, சிறிய ரொண்டோ போன்ற பெயர்களைச் சில உதாரணங்களாகவும் மேற்கோள் காட்டுகிறார். எளிய மனிதர்களுக்கு மதவாதம் இல்லை!

சாமிகளை எப்படிப்பட்ட சூழ்நிலைகளில் மனிதன் படைத்துக் கொண்டான் என்று கற்பனைக் கதை சொல்கின்றன இரு கட்டுரைகள். ஆரம்பகால மதங்களில் இரத்தப் பலி கொடுப்பதும், அதையும் மலையுச்சியில் கொடுப்பதற்குமான காரணங்களாக ஆசிரியர் சொல்பவை அருமை. பணக்கார மற்றும் ஏழைச் சாமிகளுக்கு இடையே உள்ள 7 வேறுபாடுகளைப் பட்டியலிடுகிறது ஒரு கட்டுரை. மதம் + மடம் + நூல் உண்டு - கிடையாது. பணக்காரச் சாமிகள் மக்களின் சாதாரணச் சாப்பாட்டைச் சாப்பிடுவதில்லை. சர்ச் / மசூதியில் ஆடு வெட்ட முடியாது - தர்காவில் வெட்டலாம். மதச்சாமிகளைக் கும்பிட இடையில் புரோகிதர் / பாதிரியார் / முல்லா தேவை. ஏழைச் சாமிகளுக்குப் பூசை நாளில் அந்த நேரத்திற்கு மட்டும் அய்யர் அல்லாத பூசாரி இருப்பார். ஏழைச்சாமிகள் அடிக்கடி மனித உடலில் இறங்கி வந்து சாமியாட்டம் ஆடுவதுண்டு. ஏழைச்சாமிகளுக்குக் கற்சிலைகள் கிடையாது. ஏழைச்சாமிகளை வணங்கும் ஏழை மக்கள், பணக்காரச் சாமிகளையும் வணங்குவதுண்டு. ஆனால் பணக்காரச் சாமியை வழிபடுபவர்கள் எவரும் சுடலைமாட அய்யங்கார், காளியப்ப அய்யர், முனியப்ப ஆச்சாரியார் என்று பெயர் வைப்பதில்லை. ஒரு காலத்தில் ஏழையாய் இருந்து திடீர் பணக்காரர் ஆகிவிடும் ஆதிபராசக்தி போன்ற சாமிகளும் சரித்திரத்தில் உண்டு.

இப்படி மனிதனே கடவுளையும் படைத்துவிட்டு அதற்குப் பயப்படுபவனாகவும் மாறிப் போய், கருணை வடிவமாகவும், இதயமில்லா இவ்வுலகில் இதயமாகவும் கற்பனை செய்து கொண்டு வாழும் மனித சமூகத்தைப் பற்றி பேசும் கட்டுரைகளை 'கடவுள் இல்லை; இல்லவே இல்லை; கடவுளை நம்புபவன் முட்டாள்; கடவுளை நம்பச்சொல்பவன் அயோக்கியன்' என  பெரியாரின் வார்த்தைகளுடன் முடிக்கிறார் ஆசிரியர். கண்டிப்பாக படித்து சிந்திக்க வேண்டிய புத்தகம்.

தொடர்புடைய எங்களின் பிற பதிவுகள்:
1. தம்பியின் குறுஞ்சாமிகளின் கதைகள்
2. அண்ணனின் ஆதிசேசன் படுக்கை
3. அண்ணனின் துருத்தி

'கடவுள் அல்லது கடவுள்கள் படைப்புகளில் சிறந்தது எது?
மனிதன்
யார் சொன்னது?
மனிதன்'
என்றார் ஓர் அறிஞர்.
'மனிதன் அல்லது மனிதர்கள் படைப்புகளில் சிறந்தது எது?
கடவுள்
யார் சொன்னது?
கடவுள்'
என முடிக்கிறேன் நான்.

அனுபந்தம்:
----------------
புத்தகத்திற்கு அப்பால்,

1. எனக்குப் பிடித்த ஏழைச்சாமி, வனத்துச் சின்னப்பர். விவசாய கத்தோலிக்கக் கிறித்தவர்களின் சாமி. பூச்சிப் பட்டைகளில் இருந்து காப்பவர் என்ற நம்பிக்கை. ஆடிமாத புதன் கிழமைகளில் விவசாய நிலங்களில் கோழி வெட்டிச் சமைத்துச் சாப்பிடுவார்கள். வருமானம் வராத சாமி என்பதால், எனக்குத் தெரிந்த வரையில் இன்னும் எந்தப் பாதிரியாரும் இவரை மதத்தில் சேர்க்கவில்லை. இப்போது அவருக்கு வெள்ளைத்தோல் உருவம் கொடுத்து கண்ணாடி போட்டு கடைகளில் விற்கிறார்கள். வீட்டிலேயே சமைக்கிறார்கள். இச்சாமியைத் திரும்பவும் விவசாய நிலங்களுக்குக் கொண்டு போய் காப்பாற்ற வேண்டும்.

2. ஒரிசாவில் பூரி ஜெகன்நாதர் என்ற பணக்கார சாமி இருக்கிறது. இருமுறை அங்கு சென்றிருக்கிறேன். கோயிலுக்குள் சென்றதில்லை. தேர் மிகப் பிரபலம். மூன்று உருவங்களாகக் காட்சியளிக்கும் அச்சாமிகளுக்கு, 'நான் கடவுள்' திரைப்படத்து மாங்காட்டுச் சாமி மாதிரி கைகால்கள் கிடையாது. ஏன் அப்படி என்று தேடிக் கதை படியுங்கள். தலையும் முண்டமும் சேர்த்து ஒரே உடலாய் இருக்கும் சாமிகளைக் கும்பிடும் மரபு பற்றியும் தேடிப் படியுங்கள்.

- ஞானசேகர்
 (http://jssekar.blogspot.in/)

No comments: